தாஜ்மகாலுக்கு யோகி வருகை!

க்ரா

பா ஜ க வினரால் அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ள தாஜ்மகாலுக்கு  உ பி முதல்வர் யோகி வருகை தந்தார்.

தாஜ்மகால் பற்றிய சர்ச்சைகளை தொடர்ந்து பா ஜ க வினர் எழுப்பி வருகின்றனர்.  முதலில் உ பி மாநிலம் வெளியிட்ட சுற்றுலாத் துறை கையேட்டில் தாஜ்மகாலின் பெயர் விடுபட்டிருந்தது.  அதை பல எதிர்கட்சித்தலைவர்கள் கண்டித்ததும் தாஜ்மகால் ஏற்கனவே புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் என்பதால் அதைக் குறிப்பிடவில்லை என காரணம் சொல்லப்பட்டது.   அந்த சர்ச்சை ஓய்ந்ததும் பா ஜ க சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், தாஜ்மகால் இந்திய அரசியலில் ஏற்பட்ட ஒரு கறை எனக் கூறினார்.   அதன் பின்பு பாஜக பாராளுமன்ற உறுப்பினர் வினய் கட்டியார் அது ஒரு சிவாலயம் எனக் கூறினார்.

இந்நிலையில்  பா ஜ க ஆளும் உ. பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தாஜ்மகாலுக்கு வந்து அதை பார்வையிட்டார்.   அவருடன் மாநில சுற்றுலா அமைச்சர் ரீடா பகுகுணா ஜோஷி உட்பட பல பா ஜ க தலைவர்கள் உடன் வந்தனர்.   உ பி யை ஆண்ட பா ஜ க முதல்வர்களில் தாஜ் மகாலை பார்வையிட்ட முதல் முதல்வர் யோகியே ஆவார்.    ஏற்கனவே கோரக்பூரில் நடந்த ஒரு பேரணியில் யோகி தாஜ்மகாலை இந்தியாவின் பெருமை எனவும் உலகத் தரம் வாய்ந்த கட்டிடம் எனவும் புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் வருகையையொட்டி, தாஜ்மகால் வளாகத்தில் வடக்கு ஆக்ராவின் சட்டமன்ற உறுப்பினர் கர்க் செய்தியாளர்களிடையே பேசுகையில்,  “சிவன் கோயிலை இடித்து விட்டு பிறகு முகலாயர்களால் கட்டப்பட்டதே இந்த தாஜ்மகால் ஆகும்.  பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தாஜ்மகால் கட்டப்பட்ட இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்ததையும், அதை இடித்து விட்டு தாஜ்மகால் கட்டியதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.   பா ஜ க தாஜ்மகாலின் முக்கியத்துவத்தை குறை கூறவில்லை.   ஆக்ராவுக்கு பெருமை சேர்க்கும் தாஜ் மகால் உலகின் ஏழாவது அதிசயம் என்பதையும் மறுக்கவில்லை. ” என தெரிவித்துள்ளார்.

பா ஜ கவில் பலரும் தாஜ்மகாலைப் பற்றி பலவிதமான கருத்துக்களை மாறி மாறி தெரிவிப்பதைக் குறித்துக் கேட்டபோது,   ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கருத்தும் ஒவ்வொரு மாதிரி இருப்பது இயல்பே என பதிலளித்தார்.    சரித்திர ஆய்வாளர்கள் பலர் தாஜ்மகால் ஷாஹகானால் அவர் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்ட ஒரு கட்டிடமே என்றும் அது கோயில் இல்லை எனவும் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர்.