யோகி ஆதித்யநாத் மீதான வெறுப்பு பேச்சு வழக்கு…..உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

லக்னோ:

கடந்த 2007ம் ஆண்டு உத்தரபிரதேசம் கோராக்பூரில் யோகி ஆதித்யநாத்தின் வெறுப்பு பேச்சு வன்முறையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போதைய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது 2009ம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது குற்றப்பத்திரிக்கையில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆதித்யநாத் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி பெறவில்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து மனுதாரரான ரஷீத் கான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கார், சந்திரசுத் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.