ஹூப்ளி:

ர்நாடகாவில் நடந்த பாஜக பேரணியில் கலந்துகொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், “கன்னட முதல்வர் சித்தராமையா துறவிகள் தேவையா அல்லது திப்பு சுல்தானை வணங்குபவர்கள் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி நகரில் பாஜக சார்பில் ஒரு பேரணி நடத்தப்பட்டது.   இந்தப் பேரணியின் முடிவில் நகரில் உள்ள நேரு விளையாட்டரங்கில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

அவர் தனது உரையில், “இந்த கர்நாடக மாநிலம் அனுமனை வணங்கும் மாநிலமாகும்.    ஆனால் இதை திப்பு சுல்தானை வணங்கும் மாநிலமாக, காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மாற்றி விட்டார்.   தற்போது அவர் முக்கிய கேள்விக்கு விடை அளிக்க வேண்டும்.  துறவிகள், மதத் தலைவர்கள், இறைவன் மற்றும் இறைவியர்கள் தேவையா அல்லது திப்பு சுல்தானின் பக்தர்கள் தேவையா என்னும் கேள்விதான் அது.

திப்பு ஜெயந்தி ஊர்வலம்

ஏற்கனவே தேர்தலை முன்னிட்டு ஜாதி பிரிவினையை குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் உருவாக்க காங்கிரஸ் முயன்றது.   ஆனால் அவர்களின் முயற்சி அங்கு வெற்றி பெறவில்லை.   இங்கும் ஒரு பிரிவினரை தனி மதமாக்க உறுதி கூறி மற்றொரு பிரிவினையை உண்டாக்க காங்கிரஸ் சதி செய்கிறது.    இங்கும் அவர்கள் முயற்சி தோல்வி அடையும்.

உத்திரப் பிரதேச அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தரப்பட்ட விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.   கர்நாடகாவில் அது போல ஏன் தள்ளுபடி செய்யவில்லை?   உத்திரப் பிரதேசத்தில் 86 லட்சம் விவசாயிகளின் ரூ.36000 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.    ஆனால் இங்குள்ள காங்கிரஸ் அரசு அவ்வாறு செய்யாது.  ஏனெனில் பிறகு வங்கியில் இருந்து அவர்கள் ஊழல் செய்ய பணம் இருக்காது என்பதால் கடன் தள்ளுபடியை நிச்சயம் செய்யாது” என தனது உரையில் யோகி கூறி உள்ளார்.

“துறவிகள் தேவையா? திப்பு சுல்தான் தேவையா?” என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “உங்களுக்கு கோயில் தேவையா… மசூதி தேவையா” என்று மக்களிடையே பிளவை ஏற்படுத்தும்படி பிரதமர் மோடி பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது அதே தொணியில் யோகி, பேசியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது.

இப்படி தேர்தலுக்காக மக்களிடையே மத ரீதியான பிளவை ஏற்படுத்த முயல்வதை பாஜக நிறுத்தவேண்டும்” என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.