தேர்தல் பிரசார கூட்டங்கள் : மோடியை பின் தள்ளிய யோகி

டில்லி

டந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை விட அதிக கூட்டங்களில் உபி முதல்வர் யோகி கலந்துக் கொண்டுள்ளார்.

நேற்றுடன் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.   இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து பல பிரசார கூட்டங்களிலிலும் பேரணிகளிலும் கலந்துக் கொண்டனர்.    அத்துடன் பாஜகவின் முக்கிய தலைவரான உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பிரசாரம்  செய்தார்.

இதில் பிரதமர் மோடி மத்தியப்பிரதேசத்தில்10 பேரணிகளிலும், ராஜஸ்தானில் 12 பேரணிகளிலும், தெலுங்கானாவில் 5 பேரணிகளிலும் சத்திஸ்கரில் 4 பேரணிகளிலும் கலந்துக் கொண்டார்.   இந்த 4 மாநிலங்களில் மொத்தம் அவர் 31 பேரணிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.   இது தவிர மிசோரம் மாநிலத்தில் ஒரு பேரணியில் மோடி கலந்துக் கொண்டுள்ளார்.

பாஜக தேசியத்தலைவரான அமித்ஷா மத்தியப்பிரதேசத்தில்23 பேரணிகளிலும், ராஜஸ்தானில் 15 பேரணிகளிலும், தெலுங்கானாவில் 10 பேரணிகளிலும் சத்திஸ்கரில் 8 பேரணிகளிலும் மிசோரமில் 2 பேரணிகளிலும் கலந்துக் கொண்டார்.  மொத்தம் 58 பேரணிகளில் அவர் கலந்துக் கொண்டார்.

ஆனால் இவர்களை விட முதல் இடம் வகிப்பவர் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆவார்.  இவர் மத்தியப்பிரதேசத்தில்17 பேரணிகளிலும், ராஜஸ்தானில் 26 பேரணிகளிலும், தெலுங்கானாவில் 8 பேரணிகளிலும் சத்திஸ்கரில் 23 பேரணிகளிலும்  கலந்துக் கொண்டார்

மொத்தம் 74 பேரணிகளில் கலந்துக் கொண்ட யோகி ஆதித்ய நாத் அதிக இடங்களில் பிரசாரம் செய்துள்ளார்.   இது குறித்து பாஜகவின் தலைவர் ஒருவர் மோடியை விட அமித்ஷாவை விட மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்றவர் யோகி என கூறி உள்ளார்.    பிரதமரை விட ஒரு மாநில முதல்வருக்கு அதிக வரவேற்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.