லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு, பறைகள், டின்கள், பாத்திரங்கள் மற்றும் டிரம்களை தட்டுமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வேளாண்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த ஆலோசனையை வழங்கினார் யோகி ஆதித்யநாத். இதுதொடர்பாக ஒரு பத்திரிகை செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
“சத்தம் கேட்டால், அந்த இடத்தை விட்டு வெட்டுக்கிளிகள் அகன்றுவிடும் என்று எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. எனவே, வெட்டுக்கிளிகள் நாசம் செய்யும் இடத்தில் முடிந்தளவு ஒலி எழுப்பி அவற்றை விரட்டுமாறு நாங்கள் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம். பறை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளோம்” என்கிறார் ஒரு வேளாண்துறை அதிகாரி.
அம்மாநிலத்திலுள்ள ஜான்சி, லலித்பூர், ஆக்ரா, மதுரா, ஷாம்லி, முசாபர்நகர், பக்பாட், ஹமிர்பூர், மஹோபா, பண்டா, சித்ரகூட், ஜலாவுன், எட்டாவா, சோன்பத்ரா, மிர்ஸாபூர், சந்தெளலி மற்றும் கான்பூர் டெஹாட் ஆகிய 17 மாவட்டங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.