கோரக்பூரில் குழந்தைகள் மரணத்துக்கு யோகி கூறும் புதிய காரணம்

க்னோ

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை எனவும் மருத்துவமனையில் உள்ள உள்ளடி அரசியலே காரணம் எனவும் முதல்வர் யோகி கூறி உள்ளார்.

கடந்த வருடம் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதியான கோரக்பூரி அரசு மருத்துவமனையில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்தன.  அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்கும் சப்ளையருக்கு பல மாதங்களாக தர வேண்டிய பாக்கி தொகையால் அவர் ஆக்சிஜன் வழங்குவதை நிறுத்தி விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டு குழந்தைகள் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.    இது குறித்து ஏகப்பட்ட சர்ச்சைக் கருத்துகள் உலவி வருகின்றன.   நேற்று உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு அரசு நிகழ்வு ஒன்று நடந்தது.   அதில் உ.பி. முதல்வர் யோகி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எனது தொகுதியில் பல குழந்தைகள் மருத்துவமனையில் மரணம் அடைந்த செய்தியை அறிந்தேன்.  முதலில் அதை சாதாரண செய்தி என நினைத்த நான் இறந்த  குழந்தைகளின் எண்ணிக்கை 13லிருந்து 59 ஆனதும் அதன் தாக்கத்தை உணர்ந்தேன்.   நான் உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர்,  சுகாதாரத்துறை பொது இயக்குனர் உள்ளிடோரை அங்கு அனுப்பி நடந்ததை கேட்டறிந்தேன்.

அடுத்த நாள் நான் அங்கு செல்ல இருந்த போது குழந்தைகளின் மரணத்துக்கு காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறை என கூறப்பட்ட தகவலை அறிந்தேன்    ஆக்சிஜன் பற்றாக்குறை என்றால் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சுவாசக் கருவிகள் முதலில் செயல் இழந்திருக்கும்.    அதனால் அது குறித்து உடனடியாக விசாரிக்கச் சொன்னேன்.

விசாரணையில் அது ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணம் இல்லை என தெரிந்துக்கொண்டேன்.   அது முழுக்க முழுக்க மருத்துவமனையில் உள்ளடி அரசியல் வேலை மற்றும் அதிகாரிகளின் அசிங்கமான தகராறுகள் ஆகியவையினால் மரணம் நிகழ்ந்ததை தெரிந்துக் கொண்டேன்.     இது போன்ற தேவையற்ற சச்சரவை விடுத்து  மரணம் குறித்த அடிப்படை காரணத்தை கண்டறிந்து அதை நீக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.