லக்னோ:

.பி. மாநிலத்தில் அரசு சார்பில் பசு மாடுகளை பராமரிக்க கிராமப்புறங்களில்  கோசாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏராளமான மாடுகள் பலியாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உ.பி. யோகி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பசுக்களை கொல்லக்கூடாது என்று கூறி, மாநல அரசு ஏராளமான கோசாலைகளை பராமரித்து வருகிறது.

இது தொடர்பாக  2019 – 20ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், பசுக்கள் பாதுகாப்புக்கு ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள கோசாலைகளை பராமரிக்க ரூ.247.60 கோடியும், நகர்ப்புறங்களில் உள்ள கோசாலைகளை பராமரிக்க ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாடுகளை பராமரிக்க முடியாத ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் அதை விற்பனை செய்ய முடியாத நிலையில், தங்களிடம் உள்ள பசு மாடுகளை அரசின் கோசாலைகளில் விட்டு விடுகின்றனர்.

இதன் காரணமாக கோசாலைகளில் மாடுகளுக்கு போதிய வசதிகள் இல்லை என்ற கூறப்படுகிறது. ஏராளமான மாடுகள் ஒரே கோசாலையில் அடைக்கப்படுவதால் நோய் தொற்று மற்றும் உணவு பிரச்சினை காரணமாக ஏராளமான மாடுகள் பலியாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், முசாபர்நகர் மாவட்டத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற 100க்கும் அதிகமான பசுக்கள் உயிரிழந்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல கோசாலைகளில் அளவுக்கு அதிகமான மாடுகள் அடைக்கப்பட்டு உள்ளன.  இடநெருக்கடி, பசு மாடுகளுக்கு போதிய உணவு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் ஏராளமான மாடுகள் பலியாகி வருவதாகவும்  கூறப்படுகிறது.

கோசாலைகள் எனும் பெயரில் நில ஆக்கிரமிப்பும், அரசு நிதியும் தவறாகப் பயன்படுத்துவதுமே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

யோகி அரசு பசு மாடுகள் விஷயம் குறித்து யோசிக்குமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.