” நீங்கள் தனியாக இல்லை, உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் “ – கேரள மக்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

” நீங்கள் தனியாக இல்லை, உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் “ என்று கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். கேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மீனவர்களை சந்தித்த ராகுல்காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

rahul-in-kerala

கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசின் மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவத்தினர் மிகவும் கடுமையாக போராடினர். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் வெள்ள நீரினால் சூழப்பட்டு கடல் போன்று காட்சி அளித்தன. கிட்டத்தட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 8 லட்சம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை ஒருபுறம் மீட்புப்படையினர் மீட்க, மறுப்புறம் மீனவர்களும் களத்தில் இறங்கினர். தங்கள் படகுகள், மற்றும் விசைப்படகுகளை கொண்டு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை கரைச் சேர்த்தனர்.

தற்போது மழையின் அளவு குறைந்த நிலையில் மெல்ல மெல்ல கேரளா தன் நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

rahul

இந்நிலையில், கேரளாவில் பெருமழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் கேரளாவிற்கு சென்றார். அதானி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து நலம் விசாரித்த ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, “ நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுடன் உள்ளோம். எங்கள் ஆட்சி டெல்லியிலும், கேரளாவிலும் நடைபெறவில்லை. அதனால் எங்களால் பெரிய அளவில் ஏதும் செய்ய முடியவில்லை. இருப்பினும், எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். காங்கிரஸ் கட்சி உங்களுக்கு தேவையான நிதிக்களை திரட்டி தரும் “ என்று ராகுல் கூறினார்.

அதன்பிறகு, வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளான செங்கனூர், சாலக்குடி, பரவூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கௌரவித்தார்.