சென்னை:
மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க வழித்தடத்தை நாளை பிரதமர் தொடங்கி வைப்பதையொட்டி மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் 4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். மேலும் 3 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. புதிய சேவையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.