கொரோனா கால வங்கிக்கடன் வட்டி: ரிசர்வ் வங்கி பின்னால் ஒளியாதீர்கள் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

டெல்லி: கொரோனா காலக்கட்டத்தில் வட்டி கட்டப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, வங்கிக்கடன்களை ஆகஸ்ட் 31ம் தேதி வரை கட்ட வேண்டாம் என்று மத்திய அரசு சலுகை அறிவித்தது. ஆனால், ரிசர்வ் வங்கியானது ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதாவது, கடனை தள்ளிவைத்துக் கட்டலாம், ஆனால் அதற்கான வட்டி  வசூலித்தாக வேண்டும் என்று கூறியது. இதை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் கூறியதாவது: கடனை தள்ளிக் கட்ட அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசானது, அதற்கான காலக்கட்டத்தில் வட்டியை செலுத்த  வேண்டுமா, இல்லையா என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் மத்திய அரசு ஒளிந்து  கொள்ளக் கூடாது. செப்டம்பர் 1ம் தேதிக்குள் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான நீதிமன்ற அமர்வு மேலும் கூறியதாவது: கடன் பிரச்னையானது, நாடு முழுமைக்கும் நீங்கள் முழு முடக்க உத்தரவு போட்டதால் ஏற்பட்டது. 2 விஷயங்களில் உங்கள் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

ஒன்று, பேரிடர் மேலாண்மை சட்டம் குறித்து விளக்கம்தர வேண்டும். மற்றொன்று, கடனுக்கான வட்டி மீது மேலும் வட்டி போடப்படுமா என்று கூறியுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே முடிவு தீர்வாகாது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஷா, இது வியாபாரம் பற்றியே யோசிக்கும் நேரம் அல்ல என்று கடுமை காட்டினார்.