பாட்னா:
பீகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் வாக்காளர்கள் மோடி மற்றும் நிதிஷுக்கு ஓட்டு போட்டு தவறு செய்துவிட்டதாகவும், அதனை திருத்திக்கொள்ளுமாறும் கூறினார்.

மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் நேற்று பீகார் வந்தார். கிஷன்கஞ்ச், கோர்ஹா மற்றும் கதிகார் ஆகிய இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றினார். பீகாரை மோடியும், நிதிஷும் கொள்ளையடித்து விட்டதாக கடுமையாக குற்றஞ்சாட்டினார். மேலும் பணமதிப்பிழப்பு, புதிய வேளாண் சட்டங்கள், ஜி.எஸ்.டி., தொற்றுநோயை முறையாக கையாளவில்லை என்று விமர்சித்தார்.

மேலும் அவர் பேசியதாவது: இங்குள்ள இளைஞர்களிடம் கேட்கிறேன், கடந்த லோக்சபா தேர்தலின் போது மோடி அறிவித்த 2 கோடி வேலைவாய்ப்பை வழங்கினாரா. நிதிஷும் அதையே சொன்னார். எங்கே அந்த வேலைவாய்ப்புகள். இன்று இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். லட்சகணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் வயிற்றுடன் நடந்தே ஊர் திரும்பினர். அவர்களை நிதிஷும், மோடியும் கைவிட்டு விட்டனர். காங்., அவர்களுக்காக பேருந்துகளை இயக்கியது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் எங்களால் முடிந்தளவு உதவினோம்.


சத்தீஸ்கர் விவசாயிகள் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுகின்றனர். பீகாரில் ரூ.700 தான் கிடைக்கிறது. தண்ணீர், வயல்கள், உங்களுக்கு தேவையான அனைத்தும் உள்ளன. ஆனால் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள். நிதிஷ் மற்றும் மோடிக்கு வாக்களித்தீர்கள். தவறை சரிசெய்ய வேண்டிய நேரம் இது. விவசாயிகளால் அம்பானி மற்றும் அதானியை சமாளிக்க முடியுமா? பஞ்சாப் விவசாயிகள் வேளாண் சட்டங்களின் உண்மைகளை உணர்ந்ததால் மோடி, அம்பானி மற்றும் அதானி ஆகியோரின் உருவ பொம்மைகளை தசரா அன்று எரித்தனர். இவ்வாறு பேசினார்.