இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து பீகார் மாநிலத்தில் உள்ள யூ டியூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது.

‘சுஷாந்த் வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தியை போலீசார் தேடிய போது அவரை, நடிகர் அக்‌ஷய் குமார் கனடாவில் மறைத்து வைத்திருந்தார்,’ என அந்த சேனல் தெரிவித்திருந்தது.

‘சுஷாந்த் தற்கொலை குறித்து, மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேயுடன் அக்‌ஷய் ஆலோசனை நடத்தினார்’ என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டது.

இதனால் அந்த செய்தியை கொடுத்த ரஷீத் சித்திக் மீது அக்‌ஷய் குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

“என்னை பற்றி தவறான செய்தி அளித்ததால் 500 கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும்” என அக்‌ஷய் குமார், நிருபர் ரஷீத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கு ரஷீத் சித்திக், தனது வழக்கறிஞர் ஜெய்ஸ்வால் மூலம் பதில் அனுப்பியுள்ளார்.

“நான் வெளியிட்ட செய்தியில் அவதூறு எதுவும் இல்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கருத்து சுதந்தரம் உள்ளது. மற்ற டி.வி. சேனல்களும் இதே செய்தியை வெளியிட்டன. ஆனால் என் மீது மட்டும் நஷ்டஈடு கோருவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ள நிருபர் ரஷீத் சித்திக் “இந்த நோட்டீசை திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

– பா. பாரதி