டில்லி:

வெளிநாடு செல்வதை விட, தேர்தலில் வெற்றி பெற்ற  தொகுதிக்கு சென்று மக்கள் பணியாற்றுங் கள் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுரை கூறினார்.

ப.சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது,  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக  கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்க நிலுவையில் உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம் ஜாமினில் உள்ளார்.

இதற்கிடையில், அவர் தமிழ்நாட்டில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்த  நிலையில், சொந்த அலுவல் காரணமாக இந்த மாதம் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.  மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு, நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என கடந்த விசாரணையின்போது அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம தரப்பில், பிணை தொகை செலுத்த, ஏற்கனவே நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்திய பிணைத்தொகை 10 கோடி ரூபாயை திரும்ப தரவேண்டும் என புதிய மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை  இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கார்த்தி சிதம்பரத்தை கடிந்துகொண்ட நிலையில், ஒவ்வொரு முறையும் நீங்கள் வெளிநாடு செல்ல ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்று கூறியதுடன், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்கு சென்று கவனம் செலுத்துங்கள் என அறிவுரை வழங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.