தஞ்சாவூர்:

”காவிரித் தாயே… தஞ்சை காய்ஞ்சு போச்சு… நீதான் காப்பாற்ற வேண்டும் திருவையாறு காவிரி ஆற்றில் இறங்கி மண்டியிட்டு வேதனையுடன் டி.ராஜேந்தர்  பாட்டுப் பாடி பிரார்த்தனை செய்தார்.

டி.ராஜேந்தரின், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக மக்கள் வாழ்வுரிமை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக வாரியம் அமைக்க வலியுறுத்தி யும் தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வருகை தந்த டி.ஆர்.,  முன்னதாக திருவையாறு காவிரி ஆற்றில் இறங்கி, காவிரி காய்ஞ்சு கிடப்பதைப் பார்த்து, ”காவிரித் தாயே… நீதான் கைகொடுக்க வேணும். என் தவழ்ந்து வந்த அம்மா” என கண்கள் கலங்க மண்டியிட்டு வேதனையுடன் பாட்டுப் பாடினார். இது கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியது.

மேலும் பேசிய டி.ஆர்.,  ”நான் காவிரி கரைபுரண்டு ஓடியதைப் பார்த்தவன். இன்றைக்கு காவிரி காய்ஞ்சு போய் கிடக்கு. இந்தக் காவிரித் தாயைக் காய வெச்சு மீத்தேன் ஹைட்ரோகார்பன் எடுக்க இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பச்சைவயல்களை எல்லாம் எண்ணெய் வயல்களால மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இதனால் தஞ்சை பூமியைச் சோற்றுக்கு வழியில்லாத சோமாலியாவாக மாறப்போகிறது” என வேதனை தெரிவித்தார்.

அரசியல் கட்சித் தலைவர்கள்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால்தான் மாணவர்களைப் போராட்டத்துக்கு அழைக்கிறார்கள்’ என்றும் பேசினார்.