பெங்களூரு:

பாஜக.வின் குதிரை பேர ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கர்நாடகா சட்டமன்றத்தில் நாளை எடியூரப்பா தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபக்க பொது வாக்கெடுப்பு நடக்கிறது. இதனால் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்கள் 117 பேர் தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் ராய்ச்சூர் எம்எல்ஏ பசவனகவுடா தாதலிடம் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசிய 2.41 நிமிடம் கொண்ட ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி தேசிய தலைவர் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார். முன்னதாக ஆண் ஒருவர் எம்எல்ஏ.விடம் ஜனார்த்தனிடம் பேச விருப்பமா? என்று கேட்கிறார். இதன் பின்னர் ஜனார்த்தனன் போனில் பேச தொடங்குகிறார்.

எம்எல்ஏ: ம்ம் சொல்லுங்கள்.

ஜனா: நீங்கள் ஃப்ரீயா இருக்கீங்களா?.

எம்எல்ஏ: ஆம்

ஜனா: முன்பு நடந்ததை எல்லாம் மறந்துவிடுங்கள். கெட்டதையும் மறந்துவிடுஞ்கள். நல்ல நேரம் தொடங்கிவிட்டது. தேசிய தலைவர் உங்கள் முன்பு உட்கார்ந்து பேசுவார். எந்த பதவி வேண்டும். என்னென்ன வேண்டும் என்பது குறித்து நேரடியாக பேசலாம். அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்எல்ஏ: இல்லை சார். அவர்கள் தான் என்னை எம்எல்ஏ ஆக்கினார்கள்.

ஜனா: நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலை நமக்கு எதிராக உள்ளது. நீங்கள் உங்களது எதிர்பார்ப்புகள் பலவற்றை இழந்துவீட்டீர்கள். தற்போதுள்ள நிலையில் இருந்து நீங்கள் 100 மடங்கு வளர்ச்சியை அடைவீர்கள் என்பதை நான் உறுதியளிக்கிறேன்.

சிவன் கவுட நாயக் என் பேச்சை கேட்டு வந்தார். அவர் அமைச்சரானார். தற்போது அவர் தனியாக எம்எல்ஏ ஆகும் நிலையில் உள்ளார். அவர் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளார். என்னால் தான் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டது.

எம்எல்ஏ: ஓ அப்படியா.

ஜனா: உயர் அதிகாரம் கொண்ட அந்த நபர் முன்னிலையில் நீங்கள் உட்கார்ந்து பேச வாய்ப்பு ஏற்படுத்தப்படும். தற்போது நாட்டையே அவர்கள் தான் நிர்வாகம் செய்கிறார்கள். அதனால் அவர்களது வார்த்தைகள் காப்பாற்றப்படும். நீங்கள் என்ன சொத்து சம்பாதித்துள்ளீர்களோ அதை நூறு மடங்காக உயர்த்தலாம்.

எம்எல்ஏ: மன்னிக்கவும். அவர்கள் தான் எனக்கு சீட் கொடுத்து வெற்றி பெற செய்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் அவர்களை ஏமாற்ற முடியாது. நான் உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளேன்.

இவ்வாறு உரையாடல் நடந்தது. இந்த ஆடியோ சித்தராமையா கைகளுக்கு கிடைத்தவுடன் அதை நிருபர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.