அகமதாபாத் :

குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தின்போது இளம்பெண் ஒருவர் ராகுல்காந்தியுடன் செல்பி எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது.

ஏற்கனவே இரண்டு முறை குஜராத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மீண்டும் குஜராத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று திறந்த வெளி வாகனம் மூலம்  சாலை மார்க்கமாக பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது  இளம் பெண் ஒருவர் திடீரென ராகுல் நின்றிந்த வேனில் ஏறினார். இதனால் பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், அந்த இளம்பெண் தான் ராகுலின் தீவிர ரசிகை என்றும், அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றும் கூறியதால், அவரை அனுமதிக்குமாறு ராகுல் காந்தி கூறினார்.

பின்னர் வேனில் நின்று அந்த இளம் பெண், ராகுல் காந்தி தோளில் கையை போட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ராகுல் காந்தியின் எளிமை மற்றும் பொதுமக்களிடம் பழகும் விதம் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் இளம் வாக்காளர் மத்தியில் தலைவர் ராகுல்காந்தி மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக குஜராத்தில் காங்கிரசின் பலம் கூடி வருகிறது. தற்போது பட்டேல் இனத்தவர்களின் ஆதரவும் காங்கிரசுக்கு கிடைத்திருப்பதால், இந்த சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.