ஐக்கிய நாடுகள் சபை இளம் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று இந்தியர்கள் உட்பட 17 பேர் இடம்பெற்றுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
1-3youg
நீடித்த வளர்ச்சி இலக்கில் அவர்களின் தலைமைப் பண்பு, ஏழ்மையை ஒழிக்கும் முறையில் அவர்களின் பங்களிப்பு, சமத்துவம் மற்றும் சமநீதிக்கான போராட்டம் மற்றும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்ளும் திட்டம் போன்ற திட்டங்கள் சார்ந்து, அதில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் இயங்கும் 17 இளம் தலைவர்களை உலகம் முழுவதும் இருந்து ஐ.நா  தேர்ந்தெடுத்துள்ளது.
திரிஷா ஷெட்டி (வயது 25) :
இவர் பெண் கல்வி, மறுவாழ்வு, பாலின அத்துமீறல்களுக்கு எதிரான நடவடிக்கை போன்றவைக்காக ’ஷீ சேய்ஸ்’ என்னும் அமைப்பை நிறுவியுள்ளார். இவர் ஐ.நாவின் இளம் தலைவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
அங்கித் கவார்ட்டா (வயது 24):
இவர்,  திருமணம், திருவிழாக்கள், பார்ட்டி, பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களில் மீதமாகும் உணவுகளையும், வீணடிக்கப்படும் உணவை மீட்டு, உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவைக் கொண்டு சேர்ப்பதற்காக 2014ஆம் ஆண்டு , ’ஃபீடிங் இந்தியா’ என்ற அமைப்பை உருவாக்கி திறம்பட செயல்பட்டு வருகிறார். இவரும் ஐ.நா.வின் இளம் தலைவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
கரண் ஜெராத் (வயது 19) :
இவர் கடலுக்கடியில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எண்ணெய் எடுக்கும்போது, எண்ணெய் சிந்தாமல் இருப்பதற்கான மூடியைக் கண்டறிந்துள்ளார்.  இவரும் ஐ.நாவின் இளம் தலைவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இவர் அமெரிக்க வாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற  இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சிப் போட்டியில் ’இளம் விஞ்ஞானி’ விருது வென்றவர் என்பது மேலும் பெருமை சேர்ப்பதாகும்.
மேலும், ஐ.நாவின் பட்டியலில்  இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்டனி ஃபோர்ட் ஷுப்ரூக், கென்யாவைச் சேர்ந்த ரீடா கிமானி, வங்காளதேசத்தைச் சேர்ந்த நஜ்பின் கான் மற்றும் துனிசியானைச் சேர்ந்த எழுத்தாளர் சமர் சமீர் மெஜ்ஹான்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.