சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்த இளம்பெண்கள்

ச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து இளம்பெண்கள் விரதத்தை தொடங்கினர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு செய்துவருகிறது. பெண்களுக்கு தனி கழிவறைகள் கட்டப்படும், பேருந்தில் இட ஒதுக்கீடு போன்றவை . செய்யப்படும்  என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

ஆனால் சில இந்துத்துவ அமைப்புகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கன்னுபுரம் அய்யத்தோள் என்ற பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது 29), நிசாந்த் (27) மற்றும் பெயர் கூற விரும்பாத மற்றொரு பெண் உள்பட மூன்று இளம் பெண்கள், சபரிமலை செல்வதற்காக நேற்று மண்டல விரதத்தை தொடங்கினர். கருப்பு ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், “எங்களுக்கு ஐயப்பன் மீது பக்தி அதிகம். கடந்த சில வருடங்களாக 41 நாட்கள் விரதம் இருந்து வீட்டிலேயே ஐயப்பனை வணங்கி பூஜை செய்து வந்தோம்.. அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு  மனநிறைவை அளிக்கிறது. ஐயப்பனை நேரில் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது” என்று தெரிவித்தனர்..

ஆண்களை போலவே கடும் விரதம் இருந்து காடுமலை கடந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினர்