ராமண்ணா வியூவ்ஸ்:

இந்திய உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம்

 
னம் நீதிபதிகள் அவர்களே..!
இந்த நீதிமன்றங்கள் எத்தனையோ விசித்திர வழக்குகளை சந்தித்துள்ளன. . எத்தனையோ தீர்ப்புகளை அளித்துள்ளன. . எத்தனையோ பிரச்சினைகளை யாரும் மனு தாக்கல் செய்யாமலேயே தானே விசாரணைக்கு எடுத்து விசாரித்துள்ளது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது (இந்த சினிமா வசனம் உண்மையா?) என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன், ஆண்டான் – அடிமை, மேலூர் – கீழோர் என்ற பேதமைகள் கிடையாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சட்டமும், சாட்சியங்களுமே ஒரு வழக்கின் பாதையை தீர்மானிக்கிறது.
வானாளவிய அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பல நேரங்களில் வியக்க வைத்துள்ளன; மகிழ வைத்துள்ளன; சில நேரங்களில் யோசிக்கவும் வைத்துள்ளன. குறிப்பாக சமீபகாலமாக அரசை வழிநடத்தும் வகையிலான பல்வேறு அதிரடி தீர்ப்புகளையும் நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன. இது அரசின் கொள்கை முடிவு என சில மனுக்களை தள்ளுபடி செய்துள்ளன. சில கொலை சம்பவங்களை அக்கறையோடு அணுகியுள்ளன. சில சம்பவங்களை மனுதாரரின் பார்வையில் பார்க்கவும் தவறியுள்ளன.
இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவது நீதிமன்றத்தையோ, நீதிபதியையோ அவமதிப்பதற்காகவோ, உள்நோக்கம் கற்பிப்பதற்காகவோ அல்ல. சாதாரண மனிதனின் பார்வையில், டீ கடைகளில் எழும் விவாதங்களின் தொகுப்பாக கூட இதனை எடுத்துக்கொள்ளலாம்.
 
சுவாதி
சுவாதி

சமீபத்திய உதாரணங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்…
சென்னையில் சுவாதி என்ற இளம்பெண் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது. காவல்துறையை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து, வழக்கு விசாரணைக்கு கெடு வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க கோரியது. அதன்படி போலீஸாரும் குற்றவாளியை (?) கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ராமஜெயம்.. கொலை
ராமஜெயம்.. கொலை

சுவாதி கொலை வழக்கிற்கு எந்த வகையிலும் குறைவில்லாத கொடூரமும், பின்னணியும், பரபரப்பும் கொண்டது முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை சம்பவம். 2012 ஆண்டு மார்ச் மாதம் 29ம்தேதி வாக்கிங் போகும்போது கடத்தி கொல்லப்பட்ட ராமஜெயத்தை கொன்றவர்களை 4 ஆண்டு ஆகியும் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. அவ்வப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ‘வார்னிங்’ கொடுத்தாலும் காவல்துறை தொடர்ந்து அவகாசம் கேட்டு, கேட்டு குற்றவாளியை பிடிக்க ‘பெரிய வலை’ தயாரித்துக் கொண்டு இருக்கிறது.
சுவாதி கொலையில் ‘டார்கெட்’ வைத்த நீதிமன்றம் ராமஜெயம் வழக்கில் ஏன் வைக்கவில்லை என்று நாம் கேட்க முடியாது. சுவாதியின் பெற்றோர் கேட்காத நிலையிலும் கெடு நிர்ணயம் செய்தது போல, ராமஜெயம் வழக்கிலும் கெடு நிர்ணயம் செய்ய எந்த சட்டமும் தடையாக இருந்திருக்காது என்றே குழம்பலாம்.
செங்கம் தாக்குதல்
செங்கம் தாக்குதல்

இந்த இரு கொலைகளை விட கொடூரமானது (என் பார்வையில்) செங்கத்தில் ஆட்டோ டிரைவர் குடும்பத்தை காவல்துறை நடுரோட்டில் வைத்து அடித்து துவைத்தது. தொலைக்காட்சியிலும், சமூக வலைதளங்களிலும் பதற வைத்த இந்த காட்சியை கண்டு, நீங்களே நடவடிக்கை எடுக்கலாமே என்று ஒரு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தை நாடியபோது, ‘கோர்ட் நேரத்தை வீணடிக்கக்கூடாது’ என்று கராறாக சொல்லி விலகியது நீதிமன்றம். அதன் பின் ஆட்டோ டிரைவர் ராஜாவின் மனுவை மற்றொரு நீதிபதி ஏற்று, ‘யாரும் புகார் கொடுக்காவிட்டாலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தானாக எப்.ஐ.ஆர். போடக்கூடாதா’ என  காவல்துறையை கடிந்து கொண்டது வேறு விஷயம்.
ராம்குமார்
ராம்குமார்

மறுபடியும் சுவாதி வழக்கிற்கே வருவோம்.
சுவாதியை கொலை செய்தது முதல், ராம்குமார் கைது செய்யப்பட்டது வரை அத்தனை தகவல்களும் பத்திரிகைகளுக்கு எப்படி வெளியானது என்று காவல்துறையை காய்ச்சி எடுத்தது உயர்நீதிமன்றம். இந்த இடத்தில் 4 வது தூண் என்று கூறப்படும் (அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்று கூறுகின்றனர்) பத்திரிகை, ஊடகங்களின் செயல்பாட்டை முடக்கவும் நீதிமன்றம் முயற்சிக்கிறதோ என்ற கவலை ஏற்படுகிறது.
சி.சி. டிவி காட்சி
சி.சி. டிவி காட்சி

இந்த கொலை சம்பவம் தன்னை தூங்கவிடாமல் செய்ததாக குறிப்பிடும் ஒரு நீதிபதி, அடுத்த நாள் தனக்கு ஏற்பட்ட வேதனையை 15 கேள்விகள் கொண்ட மனுவாக தாக்கல் செய்து நடவடிக்கை கோரினார். சுவாதி கொலை, பாதுகாப்பு குளறுபடி, ரயில்வே போலீஸ் – மாநகர போலீஸ் மோதல், கண்காணிப்பு கேமரா இல்லை என நீதிமன்றம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆதாரமாக அமைந்தவை பத்திரிகை, ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள்தான்.
இந்த செய்திகள் தான் நீதிமன்றத்தை இந்த அளவிற்கான செயல்பாட்டுக்கு தூண்டியுள்ளன. அப்படிப்பட்ட ஊடகங்களில் எப்படி செய்தி வெளியானது என்று காவல்துறையை கடிந்து கேட்பது நீதியா? பத்திரிகை, ஊடகங்கள் தங்கள் பணியை ஆற்றுவதை காவல்துறை கொண்டு தடுக்க முயற்சிக்கும் குரலாக நீதிமன்றத்தின் இந்த கேள்வி அமையாதா என்று மூத்த ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஆனால், யாரும் கேட்கவில்லை.
உடுமலை சங்கர்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

ஏற்கனவே உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியான போதும் இதே போன்று நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பின. ஒரு கொடூர கொலை சம்பவத்தால், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க, காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் ஊடகங்கள் மூலம் வெளியாவது ஒருவகையில் சமூக அமைதியை ஏற்படுத்துவதற்கும்தான் என்பதை நீதிமன்றங்கள் உணரவில்லை.
ஹெல்மெட்
ஹெல்மெட்

இந்த விவகாரத்தை விட்டு விட்டு கொஞ்சம் ரிவர்ஸில் போனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை 1ம்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதற்கும் ஒரு நீதிபதியின் சமுதாய அக்கறைதான் காரணம். இந்த வழக்கில் மதுரை வழக்கறிஞர்கள் பட்டபாடு பெரும்பாடு என்பதால், இது குறித்து யாரும் வாய் திறக்கவில்லை. ‘யானை வாங்குபர்கள் அங்குசம் வாங்க முடியாதா’ என்ற உயர்நீதிமன்றம் ஹெல்மெட் வாங்குவது தொடர்பாக ‘லாஜிக்’காக கேட்டது. இரு சக்கர வாகனத்தில் பின்னாள் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என சொன்னது. காலக்கெடு விரட்டியதால், காவல்துறை நெருக்கடிக்கு பயந்து தமிழகத்தில் ஒரு மாபெரும் ஹெல்மெட் புரட்சியே நடந்து முடிந்தது. கடைகளில் ஸ்டாக் இல்லை என்ற போர்டுகள்… பல இடங்களில் காவல்துறை பாதுகாபுடன் ஹெல்மெட் விற்கும் நிலை போன்ற அசாதாரண நிலை அப்போது ஏற்பட்டது.
இன்று என்ன நிலை?
ஒவ்வொரு வீட்டிலும் இரு ஹெல்மெட்டுகள் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. ஹெல்மெட் தயாரிப்பாளர்களிடம், விற்பனையாகாமல் இருந்த அத்தனை ஹெல்மெட்டுகளும் பணமாக மாறியது மட்டும்தான் நீதிமன்ற உத்தரவுக்கு கிடைத்த பலன். ஹெல்மெட் அணிவது அவரவர் உயிருக்கு பாதுகாப்பு என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையும், அதைக்கூட சில நாட்கள் பின்பற்றி விட்டு, உயிரைப்பற்றி கவலைப்படாமல், அதை விட உயர்நீதிமன்றத்தைப் பற்றி கவலைப்படாமல் இன்று 90 சதவீத இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் இல்லாமலேயே சென்று வருகின்றனர். ஹெல்மெட் வாங்க வைத்த நீதிமன்றம், அதனை தொடர்ந்து பயன்படுத்த வைக்க முடிந்ததா?
இதில், எங்களை ஹெல்மெட் போடச்சொல்லும் நீதிமன்றம், காரில் செல்பவர்களை சீட் பெல்ட் போடச் சொல்கிறதா? அப்படி போடாதவர்கள் மீது அபராதம் விதித்துள்ளதா என்ற ஆதங்கமும் ஒருபுறம் தொடர்கிறது.
6
சமீபத்தில் ‘கபாலி’ படம் திருட்டு விசிடியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கில் திரைப்பட தயாரிப்பாளரின் மனுவை அவசரமாக விசாரித்து, திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே நீதிமன்றம் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே திரையரங்குகளில் வாங்க வேண்டும்; அதனை இந்த நீதிமன்றம் கண்காணிக்கும் என்று பொதுமக்களின் குரலை ஒலித்து இருந்தால், ‘மகிழ்ச்சி’ என்று அனைவரும் சொல்லி இருப்பார்கள்.
"கபாலி" ரஜினியும், திருட்டு விசிடியை தடுக்க வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற தயாரிப்பாளர் தாணுவும்
“கபாலி” ரஜினியும், திருட்டு விசிடியை தடுக்க வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற தயாரிப்பாளர் தாணுவும்

ஒரு தனிப்பட்ட தயாரிப்பாளர், நடிகர் கோடிகளை குவிக்க எவ்வித தடையும் ஏற்பட்டு விடக்கூடாது என அவரது உரிமையை போற்றிப்பாதுகாக்கும் நீதிமன்றம், திருட்டு விசிடியை பார்க்கும் நிலைக்கு ஏன் பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்து இருந்தால் அது கோடிக்கணக்கான மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக இருந்திருக்கும்.
எம்ஜிஆர் -சிவாஜி காலம் போல இப்போது திரைப்படங்கள் வருவதில்லை என்று இந்த தீர்ப்பில் நீதிபதி வருத்தப்பட்டது போல், அந்த காலங்களை போல ரசிகர்களை கொள்ளையடிக்காத திரையுலக வியாபாரமும் இப்போது இல்லை என்றாவது குறைந்தபட்சம் கோடிட்டு காட்டியிருக்கலாம்.
சினிமா விவாகாரம் என்று வந்தால் விஸ்வரூபம் தொடங்கி பல விவகாரங்களை நீதிமன்ற பார்வையில் அலச வேண்டும். அதற்கெல்லாம் இப்போது நேரமும் இல்லை; அவசியமும் இல்லை. இருந்தாலும், ‘உட்தா பஞ்சாப்’ படம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, ‘கருத்துரிமை’ பேசும் போராளிகளுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. எவ்வித தணிக்கையும் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாகுமானால், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால்தான் தணிக்கை வாரியம் அரசால் உருவாக்கப்பட்டது. அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பின் பணியை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
"உட்தா பஞ்சாப்’ "  திரைப்பட போஸ்டர்
“உட்தா பஞ்சாப்’ ” திரைப்பட போஸ்டர்

‘உட்தா பஞ்சாப்’ பட தீர்ப்பு. ‘ஒரு படத்தின் காட்சிகளை நீக்கவோ, மாற்றவோ தணிக்கைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை. அது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்கலாமா, மேல் உள்ளவர்கள் பார்க்கலாமா என்பதை குறிக்கும் U/UA/A என படத்தின் மேல் லேபிள் ஒட்டுவது மட்டும்தான் தணிக்கைத்துறையின் வேலை’ என்று கூறியுள்ளது.
‘ஒரு படத்தை அப்படியே வெளியிட வேண்டும். அதை நல்ல படமா, கெட்ட படமா என்று மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்’ என்று கருத்தியல் பேசும் போராளிகளை விட, ‘தாவணிக்கனவுகள்’ படத்தில் தங்கைகளோடு படம் பார்க்கப் போய், கிளு கிளு காட்சி வரும்போது, சில்லறை காசுகளை போடும்  ‘அண்ணன்’ பாக்யராஜ்கள் தான் சமுதாயத்தில் அதிகமாக உள்ளனர். இருந்தாலும், சொன்னது உச்சநீதிமன்றம் என்பதால், இனி வரும் படங்கள் எப்படி இருக்கும் என நினைத்தால் பயமாக இருக்கிறது.
ஒருபுறம் அந்தகால சினிமா போல் இந்த கால சினிமா இல்லை என ஒரு நீதியரசர் வருந்துகிறார். மறுபுறம் சினிமா என்ற பெயரில் கருத்துரிமை என்ற பெயரில் நீ என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று ஒரு நீதியரசர் அனுமதி கொடுக்கிறார். என்னதான் உச்சநீதிமன்றம் கருத்து சுதந்திரத்திற்கு பச்சைக்கொடி காட்டினாலும், நீதிபதிகள் குறித்தோ, வக்கீல்கள் குறித்தோ ஏதாவது சர்ச்சைக்குரிய காட்சிகள் சினிமாவில் இருந்தால், அதனை நீக்காமல் படத்தை வெளியிட முடியாது என்பதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
இதில் எந்தப்பக்கம் நீதி இருக்கிறது என்பதுதான் சாமனிய மக்களுக்கான குழப்பம்.
இவ்வளவையும் பேசிவிட்டு அரசியல் பேசாமல் விட்டுவிட முடியாது. புகழ்பெற்ற வழக்காக மாறியுள்ள முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு ஏற்படுத்திய விவாதங்கள், கேள்விகளுக்கு இன்னும் யாரும் விளக்கம் தர முடியவில்லை. குற்றவாளியா, இல்லையா, சொத்து சேர்த்தாரா, இல்லையா, அது வருமானத்திற்கு அதிகமா, குறைவா என பல விபரங்கள் அலசப்பட்ட நிலையில்,  ‘வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல’ என்ற தீர்ப்புக்கு முந்தைய விசாரணையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா
ஜெயலலிதா

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் 9 குறைபாடுகள் இருப்பதாக கூறி, மனுவை திரும்ப அளித்து, திருத்தி வாங்கி சேர்த்துக்கொண்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.
உச்சநீதிமன்றத்தில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 3.15 கோடி வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன. காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்குகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்வு ஏற்படவில்லை. ஆனால்,  ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதனை தாமதப்படுத்தக்கூடாது எனக்கூறி வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் தொடர்ந்து விசாரணை நடந்தது.
அவ்வளவு வேகமாக நடந்த விசாரணை தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்தபின்பும், தீர்ப்பு சொல்லும் தேதியை உச்சநீதிமன்றம் அறிவிக்கவில்லை.
"நீதி தேவதை" என்று சொல்லப்படும் உருவம்
“நீதி தேவதை” என்று சொல்லப்படும் உருவம்

ஒரு வழக்கில் தொடர்புடையவர் குற்றவாளியா, இல்லையா என்பதை என்ற தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உடனே அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று சொல்லும் அதே நீதிமான்கள்தான், ‘தாமதப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்றும் (இதனை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2013ல் சொல்லியிருக்கிறார். தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆறு மாதத்திற்கு முன் சொல்லியிருக்கிறார்) சொல்லியிருப்பதால்தான், சாமானியர்களுக்கு நீதிமன்ற விவகாரத்தில் இவ்வளவு பெரிய ஆராய்ச்சிகான அடிப்படை காரணமாகவும் இருக்கலாம்.
குழப்பங்களுடன்,
ராமண்ணா