மாடமரோஸ், மெக்சிகோ

மெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் உள்ள ஆற்றைக் கடக்க முயன்ற ஒரு வாலியர் தனது 2 வயது மகளுடன் பரிதாப மரணம் அடைந்துள்ளார்.

அமெரிக்கா தனது நாட்டில் குடியேறுபவர்களை தடுக்க எல்லையில் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த இரு நாட்டு எல்லையில் உள்ள மாடமரோஸ் நகரில் ரியோ கிராண்ட் என்னும் ஆறு இரு நாட்டையும் பிரிக்கிறது. இந்த எல்லையை தாண்டி பலர் பிழைப்புக்காக அமெரிக்கா செல்ல முயன்று வருகின்றனர். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு வருபவர்களை பிடித்து தனித்தனியே சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு இடம் பெயரும் முயற்சியில் ஒரு வாலிபர், அவர் மனைவி மற்றும் அவருடைய 2 வயது மகளுடன் மெக்சிகோவுக்கு வந்துள்ளனர். அவர்கள் எல்லையில் உள்ள மாடமரோஸ் நகரில் உள்ள முகாமில் அடைக்கலம் புகுந்துள்ளனர். பிழைப்புக்கு வழி இல்லாத வாலிபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மெக்சிகோ எல்லை அலுவலகத்துக்கு கடந்த ஞாயிறு அன்று வந்துள்ளார். அந்த அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை இயங்காது.

எனவே மூவரும் ரியோ கிராண்ட் ஆற்றை கடந்து அமெரிக்க எல்லைக்குள் செல்ல திட்டமிட்டுள்ளனர். பணம் இல்லாத காரணத்தால் மூவரும் நடந்தே ஆற்றை மெதுவாக கடக்க தொடங்கி உள்ளனர். ஒரு அளவுக்கு மேல் ஆழம் வந்ததும் தந்தை தனது மகளை தனது சட்டைக்குள் வைத்து கட்டி எடுத்துச் சென்றுள்ளார்.

மனைவியை அங்கேயே நிறுத்தி விட்டு தான் மட்டும் மகளுடன் நீந்தி அக்கறைக்கு சென்றுள்ளார்.   அவ்வாறு அவர் தனது மகளுடன் நீந்திச் சென்று அமெரிக்க கரையில் குழந்தையை இறக்கி உள்ளார். அதன் பிறகு தனது மனைவியை அழைத்து வர மீண்டும் ஆற்றில் இறங்கி உள்ளார்.

இரண்டு வயதே ஆன குழந்தைக்கு விவரம் புரியாமல் தந்தை ஆற்றில் செல்வதைக் கண்டு தானும் குதித்துள்ளது. பதறிப்போன தந்தை அந்த குழந்தையை பிடித்துக் கொண்டுள்ளார். அப்போது ஆற்றின் நீரோட்டம் காரணமாக இருவரும் அடித்த்துச் செல்லபட்டுள்ளனர். கணவரும் மகளும் ஆற்றில் முழுகியதை கண்டு கதறிய அந்த பெண்ணின் குரல் கேட்டு பலரும் வந்து தேடத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து  எல்லைப்புற அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 மணி நேர தேடலுக்கு பிறகு திங்கட் கிழமை காலை அவர்கள் இருவருடைய உடல்களும் கிடைத்துள்ளன. அந்த குழந்தை இறக்கும் தருவாயிலும் தந்தையை இறுக்கமாக பிடித்திருந்த காட்சி அனைவர் மனதையும் உருக்கி உள்ளது.