ஓசூர்:

சூர் அருகே ஹெல்மெட்டுக்குள் செல்போன் வைத்து பேசிக்கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞர், செல்போன் வெடித்து சிதறியதால், தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரது இடது காது கிழிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் யுகத்தின் தாக்கம் காரணமாக, 24 மணி நேரமும் செல்போன் மூலம் கடலைப் போடுவதும், பாடல்கள் கேட்பதும் டிரெண்டிங்காகி உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள், இளைஞிகளிடையே செல்போன் மோகம் அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியான நிலையிலும், செல்போன் மோகத்தை கைவிட ஒருவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில்,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த புலியூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர், தனது இரு சக்கர வாகனத்தில் ஓசூரில் இருந்து தனது சொந்த ஊரான புலியூருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழக்கம்போல, தனது செல்போனை தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டுக்குள் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டி வந்தார்.

அப்போது, அவருக்கு யாரோ செல்போனில் அழைப்பு விடுக்க, அவரது செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக நிலை தடுமாறி அந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார்.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், அவரது  காப்பாற்றி அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக ஹீட் காரணமாக அவரது செல்போன் வெடித்ததில், இளைஞரின் இடது காதில் பலமாக அடிபட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அவரது காது கேட்குமா என்பதும் சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாகனத்தில் செல்லும் போது செல்போன் பேசக்கூடாது என பல முறை எச்சரித்தும், பல இளைஞர்கள், இளைஞிகள்  வாகனத்தில் செல்லும் போது செல்போன் பேசுவதையும் ஸ்டைலாகவே கருதி பேசி வருகின்றனர்.