சென்னை:

சிஏஏக்கு ஆதரவாக சென்னையில் பாஜக பேரணி நடைபெற்றபோது, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதை எதிர்த்து பாஜக சார்பில் சிஏஏ ஆதரவு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் இறுதியில் சென்னையில் பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் சிஏஏக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.

அப்போது பேரணி முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த  பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து, கனகநாதன் என்ற 26வயது இளைஞர்  ‘டவுன் டவுன் மோடி’ என மோடி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினார். இதனால், பேரணியில் சென்றவர்கள், அந்த இளைஞரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக பாஜகவினர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த  கனகநாதன் (வயது 26) என்ற இளைஞரை  பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை விருருகம்பம் போலீசார் கைது செய்தனர். அவர்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. பொது நல்லிணக்கத்தை சீர்குலைத்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் கூறி உள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கை உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு முரணாக உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.  அவர் வெளிப்படுத்திய அதே வேளையில், மற்ற பகுதியை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து டிவிட் போட்டுள்ள மாநில மனித உரிமை வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மோடிக்கு எதிராக கோஷமிட்டதற்காக அந்த இளைஞர் கைது செய்யப்படுவது சட்டவிரோதமானது என்றும்,  அவர் தனது வீட்டிலிருந்தோ அல்லது சாலையிலிருந்தோ கத்தினாரா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு முழக்கத்தை எழுப்பியதற்காக நீங்கள் ஒருவரை கைது செய்ய முடியாது. சட்டமோ ஜனநாயகமோ அப்படி செயல்படாது,” என்று  கண்டனம் தெரிவித்து உள்ளார்.