நெல்லை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி, ஓடும் பேருந்திலிருந்து குதித்த இளைஞர் பலத்த காயத்துடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள கோவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்வம். வயது 32. கூலி வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், செல்வம் தன் நண்பர்களிடம் காவிரி விவகாரம் குறித்து ஆதங்கத்துடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோவைக்குளம் செல்வதற்காக நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்தில்  செல்வம் ஏறினார்.  பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த அவர், உடன் பயணித்தவர்களிடம் காவிரி குறித்து விவாதித்தபடியே வந்ததாக  கூறப்படுகிறது.

அப்போது திடீரென உணர்ச்சிவசப்பட்ட அவர்  காவிரி வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியுள்ளார்.

பிறகு, ஓடும் பேருந்திலிருந்து பின்புற வாசல் பகுதி வழியாக கீழே குதித்துவிட்டார். பேருந்திலிருந்து விழுந்த வேகத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அத்துடன், முன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிவிட்டார்.

இவர் கீழே குதித்ததைக் கண்ட ஓட்டுநர், பேருந்தை நிறுத்தினார்.

பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த செல்வம் 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.