யூத் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் மனு பாகர் தங்கம் வென்று வரலாற்று சாதனை

யூத் ஒலிம்பிக் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனு பாகர் தங்கம் வென்று வரலாறு சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பளுதூக்கும் போட்டியில் ஜெர்மி லாரினுகா தங்கம் வென்றுள்ளார்.

manu

அர்ஜெண்டினாவில் உள்ள பூனாஸ் ஏர்ஸில் நகரில் மூன்றாவது யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் வீரர், வீராங்கனைகளை பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஜெர்மி லாரினுகா தங்கம் வென்று அசத்தினார்.

அவரை தொடர்ந்து பெண்கள் பிரிவில் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதுடைய இந்தியாவின் மனு பாகர் பங்கேற்றார். அவர் இலக்கை 576 புள்ளிகளில் அடைந்து முதலிடம் பிடித்தார். இதையடுத்து யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது தங்கப்பதக்கத்தை மனு பாகர் பெற்றுத்தந்துள்ளார்.

இவரை தொடர்ந்து ரஷ்யாவின் எனினா லானா 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும், சீனாவின் வீராங்கனை லூ கைமன் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

இதற்கு முன்பு நடைபெற்ற யூத் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதில்லை. தற்போது ஜெர்மி மற்றும் மனு பாகர் பெற்றுத்தந்துள்ள தங்கப்பதக்கமே சாதனையாக உள்ளது. இந்த யூத் ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம் உட்பட இந்தியா 5 பதக்கங்களை பெற்றுள்ளது.

2014ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற யூத் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றது. அதேபோல், 2010ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் 6 வெள்ளிப்பதக்கமும், 2 வெண்கலப்பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.