பெங்களூரு

காணமல் போன ஒரு வருமான வரி அதிகாரி மகன் அவர் சகோதரியின் நண்பனால் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஒரு வருமான வரி அதிகாரியின் மகன் சரத் (வயது19).  இவர் பெங்களூருவில் வணிகவியல் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்த மாதம் 12ஆம் தேதியன்று சரத்தின் தந்தை அவருக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி பரிசளித்துள்ளார்.  அதை நண்பர்களிடம் காட்டிவிட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்ற சரத் வீடு திரும்பவில்லை.

அவர் காணமல் போய் 24 மணி நேரம் கழித்து ஒரு வீடியோ செய்தி ஒன்று வந்துள்ளது.  அதில் சரத் கடத்தப்பட்டிருப்பதாகவும், ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் விடுவிக்கப் படுவார் எனவும் சொல்லப்பட்டிருந்தது.  அவரைக் கண்டுபிடித்து தருமாறு பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.  போலீஸ் விசாரணையில் அவர் விஷால் மற்றும் 4 பேரால் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

பிறகு மேலும் விசாரணையில் சரத்தின் சகோதரியின் ஆண் நண்பர் விஷால் என்பதும் அவரை கடத்தியவர்கள் அனைவரும் சரத்துக்கு அறிமுகம் ஆனவர்கள் என்றும் தெரிந்தது.  பிறகு சரத்தின் சடலம் பெங்களூரு புறநகர் பகுதியான ராமோஹல்லி என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பிரேத பரிசோதனையில் அவர் கடத்தியபின் 2 நாட்கள் கழித்துக் கொல்லப்பட்டது தெரியவவந்துள்ளது.

போலீசார் விசாரித்ததில் விஷால் தற்போது மிகவும் கடன் தொல்லையில் இருப்பதும்,  அதற்காக பணம் தேவைப்படுவதால் நண்பர்களுடன் சேர்ந்து சரத்தை கடத்தியதும் தெரிய வந்துள்ளது.  சரத்தின் பெற்றோர் போலீசிடம் புகார் கொடுத்ததால் பயந்து போன கடத்தல்காரர்கள் சரத்தை கொன்றுள்ளார்கள்.

போலீசார் விஷால் மற்றும் அவர் கூட்டாளிகளிடம் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.