காதலியை சந்திக்க கொரோனா முகாமில் இருந்து தப்பிய இளைஞர் மீண்டும் சிக்கிய பரிதாபம்…

மதுரை:

துரை அருகே கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர், காதலியை சந்தித்துவிட்டு திரும்பியபோது காவல்துறையினரிடம் சிக்கினார். இதன் காரணமாக, அவரது காதலியும் கொரோனா தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்‍கப்பட்டு வருகின்றனர்.

மேலும்  கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மதுரை சின்ன உடைப்பு பகுதியில் தங்க வைக்‍கப்பட்டுள்ளனர். ஆனால், இங்கு தங்கியிருந்த  22 வயது இளைஞர் தப்பி சென்றுவிட்டதாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், அந்த இளைஞர், சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடி வலையதாரனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தனது காதலியை சந்திக்க சென்றது தெரிய வந்துள்ளது. இதையறிந்த காவல்துறையினர், அந்த வீட்டை சுற்றி வளைத்து, அந்த இளைஞரை கைது செய்தனர். அத்துடன்,  அவரது காதலியும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.  இளைஞரின் காதலி வீட்டையும் கண்காணிக்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Youth who escaped from madurai Corona camp to meet girl friend.. again caught
-=-