கரோலினா

உணவு எடுத்து வர மிகவும் தாமதமானதால் மெக் டொனால்ட் ஊழியர் மீது சூடான காப்பியை வீசிய வாலிபர் காவல்துறையிடம் சரண் அடைந்துள்ளார்.

நம்மில் பலருக்கு உணவு விடுதியில் உணவு கிடைக்க மிகவும் தாமதமான அனுபவங்கள் இருந்திருக்கும். இதை ஒட்டி பலர் அந்த உணவு விடுதி ஊழியரிடம் சத்தம் போட்டு இருக்கலாம். அல்லது மேலாளரிடம் புகார் அளித்திருக்கலாம். ஒரு சிலர் அந்த ஊழியருக்கு டிப்ஸ் அளிக்காமல் சென்று விட்டு அவரை தண்டித்ததாக முகநூலில் பகிர்ந்து இருக்கலாம்

ஆனால் தெற்கு கரோலினாவில் ஒரு இளைஞர் வித்யாசமாக ஊழியரை தண்டித்துள்ளார். மெக் டொனால்ட் உணவு விடுதி சர்வ தேச அளவில் புகழ் பெற்றதாகும். அந்த உணவகத்தின் கரோலினா கிளையில் நோயல் என்னும் இளைஞர் வந்து உணவுக்கு ஆர்டர் செய்து விட்டு வெகு நேரமாக காத்துக் கொண்டு இருந்துள்ளார். ஊழியர் மிகவும் தாமதம் செய்துள்ளார். இதனால் நோயல் கடும் கோபம் அடைந்துள்ளார்.

தாமதம் செய்த ஊழியர் மீது சூடான காப்பியை வீசி விட்டு நோயல் உணவகத்தை விட்டு சென்று விட்டார். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அந்த உணவகத்தின் சிசிடிவி பதிவை ஆராய்ந்து நடந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர். அதை ஒட்டி நோயல் மீது விடுதி பணியாளரை தாக்கியதாக குற்றம் பதிந்து கைது வாரண்ட் பிறப்பித்தனர்.

இந்நிலையில் நோயல் காவல்துறையினரிடம் தானாகவே சரண் அடைந்தார். அவரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நோயல் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகுஅ வர் $7500 ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.