டில்லி

ருமான வரி அதிகாரி போல் வந்த இருவர் டில்லியை சேர்ந்த தனியார் பயிற்சி ஆசிரியரிடம் இருந்து ரூ.48 லட்சம் கொள்ளை அடித்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

டில்லியில் உள்ள ரஜவுரி தோட்டம் என்னும் பகுதியில் வசித்து வரும் இந்தர்வீர் சிங் என்பவர் ஒரு தனியார் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.   இவருடைய வீட்டுக்கு நேகா என்னும் பெண் பயிற்சி மையம் குறித்த தகவல்களை விசாரிப்பதாக கூறி வந்துள்ளார்.   அவர் தகவலக்ளை கேட்டுக் கொண்டிருந்த போது அங்கு நால்வர் நுழைந்துள்ளனர்.

அவர்கள் தங்களிடமிருந்த போலி வருமான வரி அடையாள அட்டையைக் காட்டி வீட்டை சோதனை இட்டுள்ளனர்.   அப்போது அவர்கள் அந்த வீட்டில் இருந்த ரூ.48 லட்சம் ரொக்கப் பணத்தை கைப்பற்றி உள்ளனர்.   அத்துடன் பணம் கைப்பற்றப்பட்டதற்கான போலி ரசீது ஒன்றை அளித்து இந்தர்வீர் சிங் இடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.

இன்னும் ஓரிரு தினக்களில் இந்தர்வீர் சிங் வருமான வரி அலுவலகம் வந்து இந்த பணம் சம்பாதித்த விவரம் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என கூறி விட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.   அவர்கள் அந்த வீட்டின் கண்காணிப்பு காமிரா பதிவை எடுத்துச் சென்றுள்ளனர்.   அந்த வீட்டுக்கு வரும் ஆட்கள் குறித்து சோதனை செய்ய பதிவு தேவை என கூறி உள்ளனர்.

அவர்கள் போலி அதிகாரிகள் என்பதை அறிந்த இந்தர்வீர் சிங் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.    அப்போது அவர்கள் வந்த ஹுண்டாய் சாண்டிரோ கார் பற்றிய விவரம் அறிந்த காவல்துறையினர் அந்த கார் மூலம் நிதின் சூட் என்னும் 32 வயது இளைஞரையும் பிரவின்குமார் என்னும் 30 வயது இளைஞரையும் கைது செய்தனர்.

விசாரனையில் அவர்கள் ஏற்கனவே கடந்த 2015 ஆம் வருடம்  மேற்கு டில்லியில் ஒரு நகைக்கடையில் ரூ.90 லட்சம் கொள்ளை அடித்ததும் ஒரு நிலத்தை பொய்யான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.    பிரவீன் குமார் என்பவர் பள்ளிப்படிப்பை முடித்தவர் என்பதும் நிதின் சூட் ஒர் ஜூவாலஜி பட்டதாரி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள ரோகினி என்னும் பகுதியில் சூட் ஒரு ஆயுர்வேத மருந்துக் கடை வைத்துள்ளார்.   அதில் ஏராளமான நஷ்டம் உண்டானதால் கடும் கடன் தொல்லையில் இருந்துள்ளார்.    அவருடைய நண்பிகளில் ஒருத்தியான நேகா இவர்களிடம் இந்தர்சிங் வீட்டில் ஏராளமான ரொக்கப் பணம் உள்ளதை தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் வேறு இரு நண்பர்கள் உதவியுடன் வருமான வரி அதிகாரி போல் வேடமிட்டு கொள்ளை அடித்துள்ளனர்.   நேகா மற்றும் இந்த கொள்ளையர்களில் மீதமுள்ள இருவர் தலைமறைவாகி விட்டனர்.  அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.