தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் பேரணி

மராவதி

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நடைப் பயணம் முடிவில் பேரணிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி தனது நடைப் பயணத்தை முடித்து விட்டு ஏலூரு தொகுதியில் 2003ஆம் வருடம் மே மாதம் 15ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.   அவர் மகன் ஜகன் மோகன் ரெட்டி அதே போல தற்போது நடைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.   கடந்த 2017ஆம் வருடம் நவம்பர் இரண்டாம் தேதி தெலுங்கு தேசம்கட்சிக்கு எதிரான தனது நடைப்பயணத்தை அவர் தொடங்கினார்.

இந்த பயணத்தில் அவர் 2000 கிமீ தூரத்தை முடித்துள்ளார்.  அதற்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள அவரது கட்சித் தொண்டர்கள் இன்றும் நாளையும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.   இந்த பயணத்தின் போது அவர்கள்  கறுப்பு பட்டை அணிந்துக் கொண்டு கலந்துக் கொள்கின்றனர்.   இந்த நடை பயணங்களின் இறுதியில் ஒவ்வொரு இடத்திலும் பேரணிகள் நடைபெற உள்ளன.

இது குறித்து ஆந்திர மாநில அரசியல் நோக்கரான ராகவேந்திர ரெட்டி, “ஜகன் மோகன் ரெட்டியின் நடைப் பயணம் முழுக்க முழுக்க வரும் 2019 தேர்தலை குறி வைத்து நடைபெறுகிறது.    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசேகர ரெட்டி இதே போல அப்போதைய ஒருங்கிணந்த ஆந்திரப் பிரதேசத்தில் 3000 கிமீ நடைப்பயணம் செய்து ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.  தற்போது அவர் மகன் தனது தந்தையை நினைவுபடுத்தும் வகையில் அதே போல் செய்கிறார்.” என தெரிவித்துள்ளார்.