அமராவதி:

ந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற தெலுங்குதேசம் கட்சியினரை, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தடியால் அடித்து விரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்குதேசம் தலைவர்கள் செல்லும் காரின் கண்ணாடிகளை தடியைக்கொண்டு அடித்து நொறுக்கும் காட்சிகள் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளன.

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய தெலுங்குதேசம் வேட்பாளர்களுடன் மச்செர்லாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது,  தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) முன்னாள்  எம்எல்ஏ பி உமாமேஸ்வர ராவ், சட்டமன்ற கவுன்சில் (எம்எல்சி) பி வெங்கண்ணா மற்றும் அவர்களுடன் வந்த ஒரு வழக்கறிஞர் ஆகியோர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டனர்.

மச்செர்லா நகரில், அவர்கள் பயணித்த காரை ஒய்.எஸ்.ஆர். கட்சித் தொண்டர்கள் தடுத்து, அதன்மீது கற்களை வீசியும், அடியால் அடித்தும் கார் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல் நடத்தினார். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், டிரைவர்  காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியதால், அவர்கள் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது…

இந்த தாக்குதல் தொடர்பாக தெலுங்குதேசம் சார்பில் போலீசாரிடம் புகார் கூற, ஒய்எஸ்ஆர் கட்சியினர் போலீசாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவலர் ஒருவர் காயம் அடைந்த நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய முன்னாள்  எம்எல்ஏ பி உமாமேஸ்வர ராவ், ஒய்எஸ்ஆர் குண்டர்கள் எங்களை கொலை செய்ய முயற்சி செய்தார்கள், நாங்கள் அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து காவல்நிலையம் வந்தடைந்தோம், ஆனால் இங்கும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத்தொடர்ந்து,  குற்றவாளிகளை அடையாளம் காண வீடியோக்களை ஸ்கேன் செய்து வருவதாக குரசலா பிரிவு துணை எஸ்.பி. ஆர்.ஸ்ரீஹரி பாபு தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து கூறிய தெலுங்குதேசம் கட்சித் தலைவர்  சந்திரபாபு நாயுடு, கட்சித் தலைவர்கள் எல்லா இடங்களிலும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தொழிலாளர்களால் தாக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் காவல்துறையினர் ஊமையாக பார்வையாளர்களாக இருக்கிறார்கள்…  என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வீடியோ: The New Indian Express