மும்பை: 1993ம் ஆண்டு  மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு  குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேமன், மகாராஷ்டிரா சிறையில் உயிரிழந்தார்.

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி 12 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் திட்டப்படி குண்டு வெடிப்புகள் அரங்கேற்றப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான, தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.  தற்போது வரை தேடப்படும் குற்றவாளிகளாக  இருக்கின்றனர்.

இந்நிலையில், குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற யூசுப் மேமன் என்பவர் மும்பை நாசிக் மத்திய சிறையில் இன்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணம் கண்டறியப்பட வில்லை.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். யூசுப் மேமன், குண்டுவெடிப்பு வழக்கில் தற்போது வரை தலைமறைவாக இருக்கும் டைகர் மேமனின் சகோதரர் ஆவார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு சகோதரரான யாகூப் மேமனுக்கு, 2015-ம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.