தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா.
2014-ம் ஆண்டு தான் இஸ்லாம் மதத்தைத் தழுவிவிட்டதாக யுவன் அறிவித்தார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டார்.
2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை யுவன் திருமணம் செய்து கொண்டார்.
நேற்று (மே 27) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்கினார் ஷாஃப்ரூன் நிஷா.
அப்போது பலரும் யுவனின் மதமாற்றம் தொடர்பாக கேள்விகளையே திரும்ப திரும்ப எழுப்பினார்கள்.

3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இஸ்லாமைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும் என பதில் சொல்லியும் மாற்றி மாற்றி அதையே கேட்டு கொண்டிருந்தனர் .
“இளையராஜா சார் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவர் பையனை இப்படி மாத்திடீங்களே” என்று ஒருவர் கேட்க, அதற்கு யுவனின் மனைவி, “மறுபடியும் அது உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. உங்களுக்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எப்படி மக்கள் இவ்வளவு முட்டாள்தனமாக இருக்க முடியும் என்று அதிர்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

“நான் யுவனை அவருடைய நம்பிக்கை பற்றியும், அவர் ஏன் இஸ்லாமை தேர்வு செய்தார்? என்றும் நேரலையில் பேட்டி எடுக்கட்டுமா? அது உங்களுக்குப் போதுமா? உங்களில் பலர் எனக்கு தொடர்ந்து ஆர்வத்தில் மெசேஜ் அனுப்பி வருகிறீர்கள் அதனால் தான் கேட்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.