மும்பை: மிடில் ஆர்டர் விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததுதான் உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங்.

அவர் கூறியிருப்பதாவது, “நம்பர்: 4 என்பது அணியில் மிக முக்கியமானதொரு இடம். எனவே, இந்த இடத்திற்கு தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு வீரரை முன்பே தயார்செய்து வைத்திருக்க வேண்டும். அம்பதி ராயுடுவை இந்திய அணி கண்டுகொள்ளவே இல்லை.

அவர் சில ஆட்டங்களை சரியாக ஆடவில்லை என்றவுடன், உடனே அணியில் எடுக்கவில்லை. இப்படியெல்லாம் உடனே முடிவெடுக்கக்கூடாது. வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும். வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.

நீங்கள் உலகக் கோப்பையில் ஆடப் போகிறீர்கள் என்று உற்சாகம் ஊட்ட வேண்டும். நியூசிலாந்து தொடரில் மோசமாக செயல்பட்ட அணியாக இருந்த நாங்கள்தான், 2003ம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்றோம்.

ரிஷப் பண்ட்டை தொடக்கத்திலிருந்தே அணியில் சேர்க்காதது தவறு. மிடில் ஆர்டர் விஷயத்தில் செய்த அலட்சியம் உலகக்கோப்பையில் வேலையைக் காட்டிவிட்டது” என்றுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதியில், இந்தியாவின் டாப் ஆர்டரை நியூசிலாந்து காலிசெய்த பிறகு, டோனியுடன் இணைந்து ஆட, ஜடேஜாவைத் தவிர வேறு ஆளில்லாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.