நாமக்கல்:
பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கொங்கு யுவராஜ், நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். இன்று அவர் நாமக்கல் நீதிமன்றத்தின் ஆஜர் செய்யப்படுகிறார்.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த  பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த  டிஎஸ்பி விஷ்ணுபிரியா.,  கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தனது  அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   விசாரணையில்  உயரதிகாரிகள்  தலையீடு காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐ காவல்துறையினர் விசாரணை  செய்து வருகிறார்கள்.
u
இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதியால்  தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து  இதோ கோரிக்கையோடு, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதோடு, வழக்கை அடுத்த மூன்று மாதத்துக்குள் முடிக்கவும் சிபிஐக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதில், “விஷ்ணுபிரியா வழக்கில் சிபிசிஐடி விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.  சிபிஐ விசாரிக்க , உயர் நீதிமன்ற உத்தரவிட்டதில்  தெளிவான காரணங்கள் இல்லை.  ஆகவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று  கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் , சென்னை பெரியமேட்டில்  திருவேங்கடம் தெருவில் உள்ள கோல்டன் மேனர் விடுதியில் தங்கியிருந்தார். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
அவரை நேற்று மாலை சிபிசிஐடி போலீசார் திடீரென கைது செய்தனர்.அவரை நாளை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். இன்று கிருஷ்ணஜெயந்தி என்பதால் கோர்ட் விடுமுறை. ஆகவே நீதிபதி இல்லத்தில் யுவராஜ் ஆஜர்படுத்தப்படலாம் என தெரிகிறது.