கோலாலம்பூர்: இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக மலேசியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் சர்ச்சை மனிதர் ஜாகிர் நாயக்.

இந்தியாவில் பணமோசடி மற்றும் அமைதியை குலைக்கும் மதவாத பேச்சுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால், தற்போது மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளார் ஜாகிர் நாயக்.

“இந்தியாவில் வாழும் சிறுபான்மை இஸ்லாமியர்கள் அனுபவிக்கும் உரிமைகளைவிட, மலேசியாவில் வாழும் சிறுபான்மை இந்துக்கள் 100 மடங்கு அதிக உரிமைகளை அனுபவிக்கிறார்கள்” என்று பேசியிருந்தார் ஜாகிர் நாயக். அவரின் இந்த மோசமாக கருத்து அந்நாட்டில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென அந்நாட்டின் பல அமைச்சர்களே கூறும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. எனவே, இன வன்மத்தை தூண்டும் பேச்சுக்காக, ஜாகிர் நாயக் மற்றும் வேறுபல தனிநபர்கள் மற்றும் குழுக்களிடம் மலேசிய காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

“சமுதாய பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் யார் பேசினாலும், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசு ஒருபோதும் சிறிய தயக்கத்தைக்கூட வெளிப்படுத்தாது என்று அனைத்து தரப்பாரையும் எச்சரிப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.

மலேசிய மக்கள்தொகையில் 60% பேர் மலாய் முஸ்லீம்கள். மீதமிருக்கும் 40% பேரில் சீனர்களும் இந்தியர்களும் அடக்கம்.