பாலியல் தொல்லை தரும் தொழிலதிபர் : பிரபல கவர்ச்சி நடிகை புகார்

--

மும்பை

பாலிவுட்டின் மூத்த கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் தொழிலதிபர் மீது பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்துள்ளார்.

பாலிவுட் என்றும் மறக்க முடியாத கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ஜீனத் அமன்.  1970களில் இவரது மேற்கத்திய தோற்றம் அக்கால இளைஞர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.   மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவதாக வந்த ஜீனத் மிஸ் ஆசியா பசிபிக் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.   பிரபல இந்தித் திரைப்படமான ஹரே ராமா ஹரே கிருஷ்னாவில் அறிமுகமாகி  பல இந்திப் படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.

முதல் படத்தில் ஜீனத் அமன்

 

தற்போது சுமார் 66 வயதாகும் ஜீனத் அமன் தொழிலதிபர் அமர் கன்னா என்பவர் மீது பாலியல் புகார் ஒன்றை காவல்துறையினரிடம் அளித்துள்ளார்.   அதை அடுத்து காவல்துறையினர் அமர் கன்னா மீது பெண்ணைப் பின் தொடர்தல்,  பெண்ணின் மாண்பைக் கெடுக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர்,  “ஜீனத் அமனுக்கும் அந்த தொழில் அதிபருக்கும் இடையே நட்பு இருந்துள்ளது.   ஆனால் அவரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜீனத் விலகி உள்ளார்.  தொழிலதிபர் அமர் கன்னா விடாமல் அவரை தொடர்ந்து வந்துள்ளார்.   மேலும் தொலைபேசியில் ஜீனத்துக்கு துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.  இதனால் ஜீனத் புகார் அளித்துள்ளார்.   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.