காபூல்: ஜிம்பாப்வே – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டநேரம் முடிந்த நிலையில், ஜிம்பாப்வே அணி சற்று ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அமீரக நாட்டில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால், அந்த அணி சிறப்பாக ஆடவில்லை. அந்த அணியின் அஃப்ஸார் சஸாய் அதிகபட்சமாக 37 ரன்களை அடித்தார். இப்ராகிம் ஸர்தான் 31 ரன்களை எடுத்தார். மொத்தம் 47 ஓவர்களே தாக்குப்பிடித்த அந்த அணி, 10 விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களையே எடுத்தது.

ஜிம்பாப்வேயின் முஸாராபனி 4 விக்கெட்டுகளையும், விக்டர் யாவ்ச்சி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் சீன் வில்லியம்ஸ் 54 ரன்களை அடித்து நாட்அவுட்டாக இருக்கிறார். சிக்கந்தர் ரஸா 43 ரன்களை எடுத்து அவுட்டானார்.

கடைசியில், முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 133 ரன்களை எடுத்துள்ளது.