சீமை கருவேல மரம் அழிப்பு:  நீதிபதிகள் அதிருப்தி

--

மதுரை:

‘சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி. கண்துடைப்பாக உள்ளது” என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம் மற்றும் கிருபாகரன்  ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.

இது குறித்த வழக்கில், கடந்த பிப்ரவரி 10ம் தேதி  நீதிபதிகள் செல்வம், கலையரசன் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. அதில், தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, பிப்., 27ல் அறிக்கை தாக்கல் செய்ய, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம், நீதிபதிகள் செல்வம், கிருபாகரன் ஆகியோர் ஒரே காரில் இது குறித்து ஆய்வு செய்ய  புறப்பட்டனர். மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

நரசிங்கம் கண்மாய், கடச்சனேந்தல் அந்தனேரி கண்மாயில் நீதிபதிகள் திடீர் ஆய்வு செய்தனர். பின், சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாத கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில், மதியம், 3:10 வரை நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதிகாரிகளிடம் நீதிபதிகள், “இடங்களில், சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், தனியார் நிலங்களில் சரிவர பணிகள் நடக்கவில்லை.  ஆகவே சீமக்கருவேல் மரங்கள் அகற்றும் பணியில்  எங்களுக்கு திருப்தி இல்லை. கண்துடைப்பிற்காக இதை செய்யக்கூடாது. . தமிழகம் முழுவதும் இப்பணி பற்றி திடீர் ஆய்வு செய்வோம். நாங்கள் ஏன் இந்த வெயிலில் நின்று, இப்பணியை ஆய்வு செய்ய வேண்டும்? ‘ஏசி’ அறையில் அமர்ந்து, உத்தரவிடக் கூடாதா? நாங்கள் நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறோம். சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது, நாட்டிற்கு செய்யும் மகத்தான சேவை. இதை வெறும் அலுவலக பணியாக பார்க்காமல், சமூக பணியாக கருத வேண்டும். சீமைக்கருவேல மரத்தின்  வேர், 120 அடி ஆழம் வரை ஊடுருவுகிறது; நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படுத்துகிறது.

ஆகவே, இம் மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும். இதற்கு வி.ஏ.ஓ.,க்கள், தாசில்தார்கள் உதவி செய்ய வேண்டும். ஊடகங்களில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்” என்று நீதிபதிகள்  தெரிவித்தனர்.

பிறகு அரசு வழக்கறிஞர் முருகானந்தத்திடம், நீதிபதி செல்வம், ”இப்பணியை அரசு தரப்பில் சரியாக மேற்கொள்ளவில்லையே? பேசாமல் நாமே களத்தில் இறங்கிவிட வேண்டியது தானா” என்றார்.

அதற்கு முருகானந்தம், ”தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பதிலளித்தார்.

நீதிபதிகளிடம், மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ”தனியார் நிலங்களில் , சீமை கருவேல மரங்களை அகற்றாவிட்டால், நிலத்தை அரசே கையகப்படுத்த, உரிமையாளர்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும். மாவட்டத்தில், இரண்டு வாரங்களில் முழுமையாக சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படும்,” என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வரலாற்றில், நீதிபதிகளே நேரடியாக கள ஆய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.