டெல்லி: பயிர்களை நாசமாக்கும் லோக்கஸ்டஸ் வகை வெட்டுக்கிளிகளை தடுக்க, ராஜஸ்தான், குஜராத் மாநிலங் களில் தடுப்பு குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த  2019ம் ஆண்டு இறுதியில் சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளின் விளைநிலங்களை சேதப்படுத்திய  வெட்டுக்கிளிகள்,  இந்தியாவையும் தாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், சோமாலியாவில் இருந்து இந்திய பெருங்கடல் வழியாக இந்தியாவுக்கு வெட்டுக் கிளிகள் வரும் என ஏற்கனவே ஐ.நா.உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, வெட்டுக்களிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உ.பி. மாநிலத்தில் பயிர்களை சூறையாடியது.  தற்போது மீண்டும் வெட்டுக்கிளிகள் தாக்கம் சில மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து, அதை கட்டுப்படுத்த குழு அமைத்தல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  2020 ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களில், உள்ளூர் வட்டார அலுவலகங்களால் (எல்சிஓ) 2,78,716 ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் உணவுபஞ்சத்தை ஏற்படுத்துமா வெட்டுக்கிளிகள்? 

ஆகஸ்ட் 22 வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், அரியானா, உத்தராகண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில், 2,87,374 ஹெக்டேர் பரப்பில் மாநில அரசுகளால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து,  ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய்சால்மர், ஜோத்பூர், பிக்கானிர் ஆகிய 3 மாவட்டங்களில், 4 இடங்களிலும், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், எல்சிஓ-க்களால் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்பகல் மற்றும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  ராஜஸ்தான், குஜராத் ஆகிய  இரு மாநிலங்களிலும், வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த தேவையான பணியாளர்கள், மருந்து தெளிப்பு வாகனங்களுடன் கட்டுப்பாட்டுக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.