2024-ம் ஆண்டு மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில், 200 தொகுதிகளில் மாலை 5 மணிக்குப் பிறகு எத்தனை பேர் வாக்களித்தனர் என்ற விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் முறையாகப் பதிவு செய்யவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையம் முன்கூட்டியே அறிவிக்கும் நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடையும். ஆனால், வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வரிசையில் காத்திருப்பவர்கள் வாக்களிக்க முடியாமல் இருந்தால், அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்கும் வகையில் நேரம் நீட்டிக்கப்படும். 2024 தேர்தலில் ஆய்வு செய்யப்பட்ட 530 மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் மாலை 6 மணியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாலை 5 மணிக்குப் பிறகு நடைபெற்ற வாக்குப்பதிவு விவரங்கள் 200 தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் முறையாகப் பதிவாகவில்லை. இதனால், அந்தத் தொகுதிகளில் கடைசி ஒரு மணி நேரத்தில் என்ன நடந்தது என்பதை தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடைசி ஒரு மணி நேர வாக்குப்பதிவு ஏன் முக்கியம்?
தேர்தல் நிபுணர்களின் கருத்துப்படி, வாக்குப்பதிவு முடிவடையும் கடைசி நேரத்தில் முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பலவீனமான நிலையில் உள்ள அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் மாலையில் வெளியேறிவிட்டால், அந்தச் சாவடிகளில் போலி வாக்குகள் செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.
தேர்தல் நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில், வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை படிவம் 17A (Form 17A) என்ற தனிப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படுகிறது.
இந்த இரண்டு பதிவுகளிலும் உள்ள வாக்குகளின் எண்ணிக்கை ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் கணக்கிலும், வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திலும் இந்த எண்ணிக்கைகள் பொருந்த வேண்டும்.
530 தொகுதிகளின் ஆவணங்களை ஆய்வு செய்த விசாரணை
‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ (The Reporters’ Collective) என்ற செய்தி ஆய்வு அமைப்பு, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 2024-ல் தேர்தல் நடைபெற்ற 467 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 63 மக்களவைத் தொகுதிகள் என மொத்தம் 530 தொகுதிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் பதிவுகளைப் பெற்று ஆய்வு செய்துள்ளது.
தேர்தல் ஆணையம் இதுவரை பொதுவெளியில் வெளியிடாத இந்த ஆவணங்களை, ஆணையத்திற்கு வெளியே உள்ள ஒரு அமைப்பு இவ்வளவு பெரிய அளவில் ஆய்வு செய்வது இதுவே முதல்முறை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 530 தொகுதிகளில் 23 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வரிசையில் நின்றவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களின் எண்ணிக்கையையும் அதிகாரிகள் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் டோக்கன் வழங்குவார்கள். இந்த டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த டோக்கன்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்படாவிட்டால், அனுமதியின்றி யாராவது வாக்களித்தார்களா என்பதைக் கண்டறிவதும் தேர்தல் ஆணையத்துக்கு கடினமாகிவிடும்.
தேர்தல் நாளன்று வெளியிடப்படும் வாக்குப்பதிவு விவரங்கள் தற்காலிகமானவை என்று தேர்தல் ஆணையமே கூறுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையைத் தனியாகவும் முறையாகவும் பராமரிப்பது மிகவும் அவசியம். கடைசி ஒரு மணி நேர வாக்குப்பதிவு விவரங்களைப் பதிவு செய்யாமல் இருப்பது தேர்தல் ஆணையத்தின் சொந்த விதிமுறைகளுக்கே எதிரானது என்றும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஆனால், வாக்குப்பதிவு தொடர்பான முக்கியத் தகவல்களே முறையாகப் பதிவு செய்யப்படாதது கவலைக்குரியது என்று அந்த ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவோ, குறிப்பிட்ட இடங்களில் வாக்குகள் திருடப்பட்டதாகவோ தாங்கள் முடிவுக்கு வரவில்லை என்றும், ஆனால் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கும் கண்காணிப்பு குறைபாடுகள் இருப்பதை வெளிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஏற்கெனவே 51 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முரண்பாடு!
‘தேர்தல் தணிக்கை’ (Election Audit) என்ற தலைப்பில் வெளியாகும் இந்த ஆய்வுத் தொடரின் முதல் பகுதியில், இதே 530 தொகுதிகளுக்கான ஆவணங்களை ஆய்வு செய்தபோது, 51 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், தேர்தல் ஆணையம் கணக்கிட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடு இருந்தது கண்டறியப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.
தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பகுதி, கடைசி ஒரு மணி நேர வாக்குப்பதிவு விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் வழங்கப்பட்ட டோக்கன்கள் தொடர்பான பதிவுகளில் உள்ள குறைபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
மூல செய்தி : The Reporters’ Collective – Election Audit (Part 2)