பாகிஸ்தானில் கூடுதல் மாகாணங்களை உருவாக்கும் முயற்சிக்கு எதிராக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கூடுதல் மாகாணங்களை உருவாக்குவது குறித்து மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்திருந்தார். இந்த யோசனை, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சிந்து மாகாணத்தில் ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கராச்சி நகரம் அக்கட்சியின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதுகுறித்து பிலாவல் கூறுகையில், “சிந்து மாகாணத்தை வலுக்கட்டாயமாகப் பிரித்தால், கராச்சியின் வீதிகளில் ஓடும் ரத்தத்துக்கு யார் பதில் சொல்வார்கள் என்ற கேள்வி எழும். மாகாணங்களை வலுக்கட்டாயமாகப் பிரித்தால், சமூகத்திலும் பிளவு ஏற்படும். அது பகைமைக்கு வழிவகுக்கும். அத்தகைய ரத்தக் களறியை நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசில் முக்கியக் கூட்டணிக் கட்சியாக உள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 74 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக்கட்சி, அரசுக்கு ஆதரவளித்து வருகிறது. இருப்பினும், புதிய மாகாணங்கள் உருவாக்கும் திட்டத்தின் பின்னணி என்ன என்றும், தங்களிடம் ஆலோசிக்காமல் இந்த விவகாரம் பேசப்படுவது ஏன் என்றும் பிலாவல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கராச்சியை மையமாகக் கொண்ட மோதல் ஏன்?
சிந்து மாகாணத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கராச்சியின் பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவமே முக்கியக் காரணமாகும்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சி, அந்நாட்டின் நிதித் தலைநகரமாகவும், முக்கிய வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் கராச்சியில் இருந்து ரூ.2.52 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது. இதே காலகட்டத்தில் லாகூரில் ரூ.1.40 லட்சம் கோடியும், இஸ்லாமாபாத்தில் ரூ.1.16 லட்சம் கோடியும் வரி வருவாயாகக் கிடைத்துள்ளன.
பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 20 சதவீதம் கராச்சியின் பங்களிப்பாக உள்ளது. பெரிய அளவிலான உற்பத்தித் தொழில்களின் மதிப்புக் கூட்டலில் சுமார் 30 சதவீதம் இந்நகரின் பங்களிப்பாகும். மேலும், பாகிஸ்தானின் மொத்த வர்த்தகத்தில் 54 சதவீதம் கராச்சி துறைமுகம் மற்றும் போர்ட் காசிம் துறைமுகம் வழியாக நடைபெறுகிறது.
எனவே, கராச்சியை சிந்து மாகாணத்திலிருந்து பிரிப்பது அல்லது அந்நகரை மையமாகக் கொண்டு புதிய மாகாணத்தை உருவாக்குவது, அந்த மாகாணத்தின் அரசியல் மற்றும் பொருளாதார அதிகார சமநிலையை மாற்றிவிடும். சிந்து மாகாணத்தின் வளங்கள், வருவாய் மற்றும் அரசியல் அமைப்புகள் மீதான செல்வாக்கையும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இழக்க நேரிடும் என்பதே அக்கட்சியின் கவலையாக உள்ளது.
புதிய மாகாணங்களை உருவாக்குவதற்கு தங்கள் கட்சி கொள்கை அளவில் எதிரானது அல்ல என்று பிலாவல் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு மக்களின் ஆதரவு இருக்க வேண்டும்; அரசியல் கட்சிகளுடன் முறையான ஆலோசனை நடத்தப்பட வேண்டும்; அரசமைப்புச் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து தங்களிடமோ, தனது தந்தையும் பாகிஸ்தான் அதிபருமான ஆசிப் அலி சர்தாரியிடமோ முறையாக ஆலோசிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானின் டான் நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இந்த விவகாரம் குறித்து ஆலோசித்துள்ளனர். புதிய மாகாணங்கள் தொடர்பான எந்த முடிவும் அரசமைப்புச் சட்ட நடைமுறைகளின்படியே எடுக்கப்பட வேண்டும் என்றும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
புதிய மாகாணங்கள் தொடர்பாக மொஹ்சின் நக்வி கூறியது என்ன?
பாகிஸ்தானின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டதாகவும், அதில் பெரிய அளவில் மாற்றங்கள் தேவைப்படுவதாகவும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கூடுதல் மாகாணங்களை உருவாக்குவது குறித்து மக்களின் கருத்தை அறிய நவம்பர் 12-ஆம் தேதி பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களையும் 14 மாகாணங்களாகப் பிரிக்கும் திட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டதாக அந்நாட்டின் திட்டமிடல் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால் தெரிவித்தார்.
அதன்படி, பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் தலா 4 மாகாணங்களாகவும், கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்கள் தலா 3 மாகாணங்களாகவும் பிரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இஸ்லாமாபாத்துக்கும் தனி மாகாண அந்தஸ்து வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பொதுவாக்கெடுப்பு நடத்துவது மட்டுமே மாகாண எல்லைகளை மாற்றுவதற்குப் போதுமானதல்ல. இதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் ஆளும் கூட்டணிக்குள்ளும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அதிகாரம் இருக்கிறதா என்றும் பிலாவல் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சை
சிந்து மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான விவகாரம் பாகிஸ்தானின் வரலாற்றுடனும் தொடர்புடையது.
1947-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருவானபோது, அந்நாட்டின் தலைநகராக விளங்குவதற்காக கராச்சி சிந்து மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பின்னர், 1955-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘ஒன் யூனிட்’ திட்டத்தின்கீழ் மேற்கு பாகிஸ்தானின் பகுதிகள் அனைத்தும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டன.
இதற்கு சிந்தி, பஷ்தூன் மற்றும் பலூச் இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் தனித்துவமான மாகாண அடையாளம் பறிக்கப்படுவதாக அவர்கள் கருதினர். இதையடுத்து, 1970-ஆம் ஆண்டு அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, மேற்கு பாகிஸ்தானின் தனித்தனி மாகாணங்கள் மீண்டும் உருவாக்கப்பட்டன.
அதேபோல், 1971-ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் உருவானதும், நாட்டின் எல்லைப் பிரிவினை தொடர்பான முக்கிய வரலாற்று நிகழ்வாக உள்ளது.
தற்போதைய புதிய மாகாணங்கள் உருவாக்கும் திட்டம், கராச்சியில் மீண்டும் இன மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சிந்து மாகாணத்தைப் பிரிப்பதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உருது பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முத்தஹிதா குவாமி இயக்கம் (MQM-P) புதிய மாகாணங்களை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கராச்சியில் பஷ்தூன், பஞ்சாபி, பலூச் இன மக்களும் கணிசமாக வசிப்பதால், இந்த விவகாரம் இரு சமூகங்களுக்கு இடையிலான பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாத நிலை உள்ளது.
சிந்து மாகாணத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கக் கோரி, அந்த மாகாண சட்டப்பேரவையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பலமுறை தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, 2026 செப்டம்பரில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேநேரத்தில், தெற்கு பஞ்சாப் பகுதியில் தனி மாகாணம் உருவாக்குவதற்கு அக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது புதிய மாகாணங்கள் உருவாக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசியல் கட்சிகளிடையே நிலவும் மாறுபட்ட அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
தற்போதைக்கு, இந்த விவகாரம் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கூடுதல் மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டுமா என்பது மட்டுமல்லாமல், நீண்டகாலமாகத் தொடரும் இன அடையாளம், அரசியல் பிரதிநிதித்துவம், அதிகாரம் மற்றும் இயற்கை வளங்கள் மீதான உரிமை தொடர்பான பிரச்னைகளை மீண்டும் கிளறாமல் மாகாண எல்லைகளை மாற்ற முடியுமா என்பதே தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.