கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து திங்கள்கிழமை புகார் பெறப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜூலை 31-ஆம் தேதியே இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், ஆட்சியர் புகார் அளிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ஆட்சியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்த வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பதிலாக வேறு உயர் காவல் அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையை ஐஜி அல்லது டிஐஜி கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.