இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமணத்துக்கு வைத்துள்ள வித்தியாசமான நிபந்தனை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ரெட்டிட் (Reddit) தளத்தில் தனது திருமண விருப்பம் குறித்து பதிவிட்டுள்ள அவர், திருமணம் செய்துகொள்ளும் பெண் ஆண்டுக்கு குறைந்தது ரூ.12 லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்றும், தான் முழுநேரமாக வீட்டைப் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் தானே கவனித்துக்கொள்வதாகவும், மனைவி தனது வேலை அல்லது தொழிலில் முழுக் கவனம் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்பை மனைவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், வீட்டுப் பொறுப்புகளைத் தான் கவனித்துக்கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்றும், குழந்தையில்லாத திருமண வாழ்க்கையையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது விருப்பம் குறித்து இந்தியப் பெண்களின் கருத்தையும் கேட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, தனது குடும்பப் பின்னணி, தோற்றம் உள்ளிட்ட விவரங்களையும் பகிர்ந்ததுடன், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
இவரது யோசனைக்கு ரெட்டிட் பயனர்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. வழக்கமாக ஆண்கள் சம்பாதிப்பதும், பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்வதும் என்ற நடைமுறையை மாற்றும் இவரது முடிவுக்கு சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற ஏற்பாடு சாத்தியமா என்றும், குடும்ப உறவில் இருவரும் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.