அடிக்கடி இரவுப் பணியில் ஈடுபடுவோரின் இதயத்தின் அமைப்பு மற்றும் இதயத் தசைகளின் செயல்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வு முடிவுகள் European Heart Journal – Cardiovascular Imaging என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் வழக்கமாக இரவுப் பணியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும், இரவுப் பணியில் ஈடுபடுவோருக்கு இதய நோய் ஏற்படும் அபாயமும், இதய நோயால் உயிரிழக்கும் வாய்ப்பும் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இரவுப் பணிக்கும் இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டுக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் வகையில் இந்தப் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டனின் UK Biobank தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 42,671 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களின் சராசரி வயது 52. இவர்களில் 1,322 பேர் அடிக்கடி இரவுப் பணியில் ஈடுபடுபவர்கள். ஆய்வு தொடங்கியபோது இதய நோய் பாதிப்பு இருந்தவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
இதயத்தின் காந்த அதிர்வு படமெடுப்பு (Cardiac MRI) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அடிக்கடி இரவுப் பணியில் ஈடுபடுவோரின் இதயத்தின் முக்கிய அறைகளின் அளவுடன் ஒப்பிடும்போது, இதயச் சுவர்கள் சற்று தடிமனாக இருப்பதும், இதய அறைகளின் அளவு ஓரளவு சிறியதாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், இதயத் தசைகள் சுருங்கும் செயல்பாட்டிலும் சிறிய அளவிலான வேறுபாடு காணப்பட்டது. அதே நேரத்தில், இதயம் ரத்தத்தை வெளியேற்றும் திறனை அளவிடும் ‘எஜெக்ஷன் ஃபிராக்ஷன்’ (Ejection Fraction) அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த மாற்றங்கள் அனைத்தும் சராசரியாகக் காணப்பட்ட சிறிய வேறுபாடுகளே என்றும், இரவுப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இதய நோய் அல்லது இதயச் செயலிழப்பு ஏற்படும் என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியரும், சீனாவின் Zhengzhou பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் முவெய் லி கூறுகையில், “அடிக்கடி இரவுப் பணியில் ஈடுபடுவதற்கும் இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் சில நுட்பமான மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இது ஒரு கண்காணிப்பு அடிப்படையிலான ஆய்வு என்பதால், இரவுப் பணிதான் நேரடியாக இதய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்த முடியாது” என்றார்.
மேலும், இரவுப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோர் தங்களது இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது, போதிய தூக்கம் பெறுவது ஆகியவை அவசியம். தூங்கும் நேரத்தையும் முடிந்தவரை சீராக வைத்திருக்க வேண்டும்.
அதேபோல், ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நோயாளிகளின் மருத்துவ மற்றும் வாழ்க்கை முறை விவரங்களைப் பதிவு செய்யும்போது, அவர்கள் இரவுப் பணியில் ஈடுபடுகிறார்களா என்பதையும் மருத்துவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரத்தத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்:
இரவுப் பணியில் ஈடுபடுவோரின் ரத்தத்தில் உள்ள சில உயிரியல் குறியீடுகளிலும் (Biomarkers) மாற்றங்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதயத்துக்கும் ரத்த நாளங்களுக்கும் நன்மை அளிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலமான டிஹெச்ஏ (DHA) அளவும், நல்ல கொழுப்பு எனப்படும் எச்டிஎல் (HDL) கொழுப்புடன் தொடர்புடைய சில அளவுகளும் குறைவாக இருந்தன.
அதேநேரத்தில், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய டிரைகிளிசரைடுகள் (Triglycerides) மற்றும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் தொடர்புடைய சில குறியீடுகளின் அளவும் அதிகமாக இருந்தது.
இந்த மாற்றங்கள் இரவுப் பணிக்கும் இதய பாதிப்புகளுக்கும் இடையே இருக்கக்கூடிய உயிரியல் தொடர்புகள் குறித்து சில தகவல்களை அளித்தாலும், இரவுப் பணியால் இந்த மாற்றங்கள் நேரடியாக ஏற்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே இதயத்தின் அமைப்பும் செயல்பாடும் ஆய்வு செய்யப்பட்டதால், இரவுப் பணியைக் குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ இதயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் சரியாகுமா என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிய முடியவில்லை.
நீண்ட காலம் இரவுப் பணியில் ஈடுபடும்போது இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள் அதிகரிக்கின்றனவா, இரவுப் பணியைக் குறைத்தால் அவை மேம்படுகின்றனவா, எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படுவதற்கு இவை காரணமாக அமைகின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாக டாக்டர் முவெய் லி தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் சில வரம்புகளும் உள்ளன. பிரிட்டனின் UK Biobank தரவுகளில் பெரும்பாலானோர் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், மற்ற நாடுகள் மற்றும் இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இதே முடிவுகள் பொருந்துமா என்பதை உறுதிப்படுத்த முடியாது. மேலும், இரவுப் பணி தொடர்பான விவரங்கள் கிடைக்காத சிலர் ஆய்விலிருந்து விலக்கப்பட்டதால், ஆய்வு முடிவுகளில் சில சார்புநிலைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.