தமிழகத்தில் ரூ.1,427 கோடி மதிப்பிலான சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பான வழக்கில், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை முதல் குற்றவாளியாக (A1) சேர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் மூலம் தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளில் 88 வயதான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீதான இந்த நடவடிக்கை, திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தபோது, அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2021 முதல் 2024 வரை தமிழகம் முழுவதும் உள்ள 28 மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை கண்டறிந்த 3 முக்கிய முறைகேடுகள்:

  1. மணல் குவாரிகளுக்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே திட்டமிட்டு முறைகேடாக வழங்கியது.

  2. மணல் எடுத்துச் செல்ல போலியான போக்குவரத்து அனுமதிச் சீட்டுகளைத் தயாரித்து, அதன் மூலம் பணம் பெற்றதாகக் கணக்கு காட்டியது.

  3. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி சட்டவிரோதமாக மணல் அள்ளியது.

இந்த முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் ஐஐடி கான்பூர் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆய்வுகள் மூலம் சரிபார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தங்களது நிறுவனங்களுக்குச் சொந்தமான இயந்திரங்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அப்பால் மணல் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சில நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கில் துரைமுருகன் தவிர மேலும் 27 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற நீர்வளத்துறை அதிகாரிகள். மற்ற 10 பேர் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள்.

நான்கு மணல் குவாரிகளில் மட்டும் சுமார் 4.03 கோடி கன மீட்டர் மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.1,427.34 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய 24 குவாரிகளில் அள்ளப்பட்ட மணலின் அளவு இன்னும் கணக்கிடப்படவில்லை.

கடந்த 2024 ஜூன் மாதம் அமலாக்கத்துறை (ED) அளித்த அறிக்கை, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை மற்றும் அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, அரசின் முன் அனுமதி பெற்ற பிறகே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.