2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள டாடா ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலை 10 அணிகளும் வெளியிட்டுள்ளன. மொத்தம் 184 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
10 அணிகளும் வீரர்களைத் தக்கவைக்க மொத்தம் ரூ.1,002.05 கோடி செலவிட்டுள்ளன. இதையடுத்து, டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்துக்காக ரூ.297.95 கோடி மீதமுள்ளது. 10 அணிகளிலும் சேர்த்து இன்னும் 66 வீரர்களைத் தேர்வு செய்ய இடங்கள் உள்ளன. இதில் 25 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானவை.

அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 22 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிகபட்சமாக 7 வெளிநாட்டு வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தலா 19 வீரர்களைத் தக்கவைத்துள்ளன.
ஏலத்தின்போது அதிக தொகையைச் செலவிடும் வாய்ப்பு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு உள்ளது. அந்த அணியிடம் ரூ.47.45 கோடி மீதமுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.41.65 கோடியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ.40.15 கோடியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் ரூ.39.50 கோடியும் உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மிகக் குறைந்த தொகையாக ரூ.8.75 கோடி மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த அணியில் மேலும் 3 வீரர்களைச் சேர்க்க இடமுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்த வீரர்கள்:
அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், குர்ஜப்நீத் சிங், ஜாக் எட்வர்ட்ஸ், ஜேமி ஓவர்டன், கார்த்திக் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், முகேஷ் சவுத்ரி, நூர் அகமது, ராகுல் சாஹர், ராமகிருஷ்ணா கோஷ், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான், சிவம் துபே, ஷ்ரேயஸ் கோபால், உர்வில் படேல்.

ஐபிஎல் 2027 வீரர்கள் ஏலம்:
-
தேதி: டிசம்பர் 16, 2026
-
இடம்: ஐடிசி கிராண்ட் கோவா
-
நேரம்: காலை 11 மணி (இந்திய நேரம்)
மொத்தம் 89 வீரர்கள், அவர்களில் 34 வெளிநாட்டு வீரர்கள், அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.