ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளைத் தடுக்க, வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாக நிறுத்தும் ‘ஸ்டாப் ஸ்விட்ச்’ வசதியை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது.

இந்த வசதி மூலம், வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவோ, மோசடி நடப்பதாகவோ சந்தேகம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை உடனடியாக நிறுத்த முடியும்.

இந்த வசதியைச் செயல்படுத்தினால், புதிய யுபிஐ பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள், புதிய ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்‌ஷன்கள் மற்றும் புதிய மூன்றாம் தரப்பு யுபிஐ செயலிகளில் வங்கிக் கணக்கை இணைப்பது போன்றவற்றைத் தடுக்க முடியும். அதேநேரத்தில், வங்கிக் கணக்கில் பணம் வருவதற்குத் தடையில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இஎம்ஐ, தானியங்கி பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிக் கட்டணங்களும் தொடரும்.

மேலும், ஒருமுறை மற்றும் ஒரு நாளில் அனுப்பக்கூடிய பணத்துக்கு வாடிக்கையாளர்களே வரம்பு நிர்ணயிக்கும் வசதியையும் ஆர்பிஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏடிஎம், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை, கார்டு உள்ளிட்டவற்றுக்கும் தனித்தனியாக வரம்பு நிர்ணயிக்க முடியும்.

இதற்கான வரைவு விதிகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் டிசம்பர் 14, 2026-க்குள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இறுதி விதிகள் வெளியான பிறகு, 2027 ஜூலை 1 முதல் இவை நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.