சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றி 1 கி.மீ. சுற்றளவுக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) தடை விதித்திருந்தது. இந்தத் தடையை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் (TNSWA) சார்பில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றி, குறிப்பிட்ட 36 சர்வே எண்களுக்கு மட்டுமே இடைக்காலப் பாதுகாப்பு மண்டலம் (Zone of Influence) அமைக்க முன்மொழியப்பட்டிருந்தது.

இந்த இடைக்காலத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கோரும் மனுதாரர்கள், கிரெடாய் சென்னை (CREDAI-Chennai) உள்ளிட்ட அனைவரும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிற துறைகள், கள ஆய்வு (Ground Truthing) பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
1,247.54 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை சதுப்புநிலம், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் ஈரநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சதுப்புநிலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அதைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ. சுற்றளவில் கட்டுமானப் பணிகளுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது. இந்தத் தடைக்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்து வழக்குகளை முடித்து வைத்தது.