தமிழகத்தில் பொது நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நூல்களின் விலையை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவரே, பதிப்பாளர்களுடன் நடைபெற்ற எந்தக் கூட்டத்திலும் தான் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு முன்னாள் பொது நூலகத் துறை இணை இயக்குநரும், நூல் விலை நிர்ணயக் குழுத் தலைவருமான இளங்கோ சந்திரகுமார் அளித்த பேட்டியில், நூல்களின் விலையைப் பேசித் தீர்மானிப்பதற்காக பதிப்பாளர்களுடன் நடைபெற்ற எந்தக் கூட்டத்திலும் தான் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாத இறுதியில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அதன்பிறகும் குழுவில் தொடர்ந்து இடம்பெற்றிருந்தார்.

நூல்களின் விலையை யார் நிர்ணயம் செய்தனர், பதிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது யார், கொள்முதல் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்ற கேள்விகளை அவரது இந்தத் தகவல் எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, இந்த முறைகேடு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக ஊழியர் ஒருவர், உயர் அதிகாரிகளின் உத்தரவின்படியே நூல் கொள்முதல் தொடர்பான பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். புத்தகங்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை மட்டுமே தாம் மேற்கொண்டதாகவும், முக்கிய முடிவுகள் அனைத்தும் உயர் அதிகாரிகள் மட்டத்திலேயே எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நூல் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அரசு நிதியில் நூல்களை வாங்குவதற்கு முன்பாக, பதிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றின் நியாயமான விலையை நிர்ணயம் செய்வதே விலை நிர்ணயக் குழுவின் முக்கியப் பொறுப்பாகும்.
கோவையில் உள்ள பெரியார் நூலகம், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கான நூல் கொள்முதலும் தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளன.
கடந்த 2025 டிசம்பரில், அப்போதைய பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பி. சந்திரமோகன், நூல் கொள்முதலைக் கண்காணிக்க 4 குழுக்களை அமைத்தார். இதில் 5 பேர் கொண்ட உயர்நிலைக் குழு, 5 பேர் கொண்ட நூல் விலை நிர்ணயக் குழு, 13 பேர் கொண்ட நூல் தேர்வுக் குழு, 137 பேர் கொண்ட நூல் பரிந்துரைக் குழு ஆகியவை இடம்பெற்றிருந்தன.
நூல்களைப் பரிந்துரை செய்வது, தேர்வு செய்வது, பதிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலையை இறுதி செய்வது என கொள்முதல் பணியின் ஒவ்வொரு கட்டத்தையும் இந்தக் குழுக்கள் கவனிக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் வழங்கிய நூல்கள் அவற்றின் உண்மையான விலையைவிட பல மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், நூல் கொள்முதலில் அமைக்கப்பட்ட நான்கு குழுக்களின் செயல்பாடுகளும் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக, நூல்களின் விலையை நிர்ணயம் செய்த நடைமுறை, கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகளின் பொறுப்பு ஆகியவை குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.
நன்றி – DT Next