காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையை முடித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
கர்நாடகம் காவிரியில் உரிய நீரைத் திறந்துவிடவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

வறட்சி நிலவிய காலத்திலும் குறைக்கப்பட்ட நீர் பங்கீட்டுக்கு அப்பால், சுமார் 11 முதல் 11.719 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டியுள்ளது என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்திருந்தது. பயிர் சேதம் மற்றும் விவசாயிகளின் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு கூடுதல் நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தது.
இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலவுவதாகவும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவித்தது. மேலும், குடிநீர்த் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டங்கள் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் கர்நாடக அரசு தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.